லஞ்சம் கொடுத்தால் 7 வருட சிறை தண்டனை : பொதுமக்கள் உஷார்

Last Modified புதன், 1 ஆகஸ்ட் 2018 (13:04 IST)
கடமையை மீறவே, செய்யவோ அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் 7 வருடம் சிறை தண்டனை அளிக்கப்படும் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.

 
லஞ்சம் என்பது காலம் காலமாக நாட்டில் இருந்து வருகிறது. அதுவும், இந்தியா போன்ற நாடுகளில் லஞ்சமும், ஊழலும் தலை விரித்து ஆடுகிறது. தங்களை வேலை விரைவில் நடக்க வேண்டுமென பொதுமக்களே அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க தொடங்கியது தற்போது லஞ்சம் பூதாகராமாக வளர்ந்து நிற்குல் நிலையை எட்டியுள்ளது.
 
லஞ்சம் வாங்கியவர்களுக்கு தண்டனை அளிக்க சட்டம் இருக்கிறதே தவிர லஞ்சம் கொடுப்பவர்களுக்கு தண்டனை வழங்க சட்டத்தில் இடம் இல்லை. எனவே, அவர்களுக்கும் தண்டனை கொடுக்கும் வகையில் ஊழல் தடுப்பு சட்டத்தில் சமீபத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அந்த திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த மசோதாவிற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, கடந்த 26ம் தேதி முதல் இந்த சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. 
 
அதன்படி, பொது ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தாலோ, லஞ்சம் கொடுப்பதாக உறுதி அளித்தாலோ 7 வருடங்கள் வரை சிறை தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டு சேர்த்தோ விதிக்கப்படும். அதே சமயம், அதிகாரிகள் லஞ்சம் கொடுக்கும் படி நிர்பந்தித்தால், காவல்துறை அல்லது  தொடர்பாக சட்ட அமலாக்க அமைப்புகளிடம் 7 நாட்களுக்குள் புகார் தெரிவித்தால் சிக்கலில் இருந்து தப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
 
வணிக நிறுவனங்களும், இந்த சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். அதன்படி, வணிக நிறுவனங்கள் தொடர்புடையவர்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் தண்டனை அளிக்கப்படும். அதேபோல், லஞ்சம் பெறுபவர்களுக்கு 3 வருட சிறை தண்டனையும், அதிக பட்சமாக 7 வருடமாகவோ, சிறைத்தண்டனை இல்லாத பட்சத்தில் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும். 
 
அதே சமயம், பொது ஊழியர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் உள்ளிட்டோரை பாதுகாக்கும் அம்சங்களும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது. ஏதேனும், சிபாரிசு தொடர்பான குற்றங்களை செய்திருந்தால், மேல் அதிகாரிகளின் முன் அனுமதி இல்லாமல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
ஆனாலும், லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டால். அவர்கள் மீது விசாரணை நடத்த எந்த முன் அனுமதியும் பெறத்தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், ஊழல் வழக்குகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :