Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரூபா பணியிட மாற்றம் எதிரொலி: பெங்களூர் சிறையில் கைதிகள் போராட்டம்!

ரூபா பணியிட மாற்றம் எதிரொலி: பெங்களூர் சிறையில் கைதிகள் போராட்டம்!


Caston| Last Modified திங்கள், 17 ஜூலை 2017 (16:38 IST)
சசிகலாவிடம் சிறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு அவருக்கு சலுகைகள் வழங்கியதாக குற்றம் சாட்டிய டிஐஜி ரூபாவை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 
 
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறை விதிகளை மீறி பல சலுகைகள் வழங்கப்பட்டதாக சிறைத்துறை டிஐஜி ரூபா அம்மாநில டிஜிபி தத்தாவுக்கு அறிக்கை அனுப்பினார். அதில் சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணராவ் சசிகலாவிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த விவகாரத்தால் தமிழகம் மற்றும் கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா இது தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றை அமைத்தார். அந்த குழு இன்று தனது விசாரணை தொடங்கியுள்ள நிலையில் டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டு பெங்களூர் நகர போக்குவரத்து ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.
 
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட சத்திய நாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அறிந்த பெங்களூர் சிறையில் உள்ள கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
பரப்பன அக்ரஹாரா சிறையில் தங்களை அதிகாரிகள் கொடுமைப் படுத்துகின்றனர். சந்திக்க வரும் உறவினர்களிடம் வசூல் செய்கின்றனர். டிஐஜி ரூபா மூலமாக இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பியிருந்தோம் இந்நிலையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது என்கிறார்கள் அவர்கள்.


இதில் மேலும் படிக்கவும் :