1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 24 ஜூலை 2014 (12:12 IST)

இரு மாணவிகளுடன் தலைமறைவான பள்ளி முதல்வர்: 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலுள்ள தனியார் பள்ளி ஒன்றின் முதல்வர், பள்ளியில் தங்கி படித்த இரு மாணவிகளுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஓட்டம்பிடித்தார். இது குறித்து விசாரித்த அம்மாநில குற்றப்பிரிவு காவல்துறையினட் நீண்ட தேடுதலுக்கு பின் பஞ்சாபில் வைத்து அவரை கைது செய்தனர்.
 
52 வயதான தவால் திரிவேதி என்பவர் படாதரியில் உள்ள டாக்டர் தீப்சந்த் கார்டி இண்டர்நேஷனல் முதல்வராக முதல்வராக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவர் பள்ளியிலேயே தங்கி படித்து வந்தனர். 2012 ஆம் ஆண்டில் இவர்கள் இருவரும் 16 வயதை எட்டியபோதே முதல்வருடன் ஓட்டம் பிடித்தனர். மாணவிகளை காணவில்லை என்று அவர்களது பெற்றோர் புகார் அளித்ததையடுத்து அம்மாநில குற்றப்பிரிவு காவல்துறையினர் இரண்டு வருடங்களுக்கு முன் வழக்கு பதிவு செய்து மூவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
 
எனினும் காவல்துறை விசாரணையில் மூவரும் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. காவல்துறையின் முன் இருந்த ஒரே ஆதாரம் தவாலின் செல்போன் மட்டுமே. அவரது எண்ணை தொடர்ந்து கண்காணித்தபோது சில நாட்களுக்கு முன் ராஜ்கோட்டிலுள்ள உறவினரை அவர் தொடர்பு கொண்டதையடுத்து காவதுறையினர் உஷாரானார்கள். துரிதமாக செயல்பட்டு மொபைல் டவரை வைத்து அவர் பஞ்சாப்பில் தங்கியிருப்பதை தெரிந்துகொண்டனர்.
 
உடனடியாக பஞ்சாப் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மூவரின் புகைப்படமும் பஞ்சாப் காவல்துறைக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட பஞ்சாப் காவல்துறையினர் புத்லாடா பகுதியில் தங்கியிருந்த மூவரையும் கண்டுபிடித்தனர். பின்னர் தவால் திரிவேதியை கைது செய்த காவல்துறையினர் மாணவிகள் இருவரையும் பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பிவைத்தனர். எதற்காக மூவரும் பஞ்சாப் சென்றார்கள் என்ற விவரம் இன்னும் கிடைக்கவில்லை. விரைவில் தவாலை குஜராத் கொண்டு வந்து விசாரிக்க அம்மாநில காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். அப்போது தான் உண்மையான விவரங்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.