வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 30 ஜூலை 2015 (20:01 IST)

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட தினம் இந்திய ஜனநாயகத்திற்கான மோசமான நாள் - பிரசாந்த் பூஷன்

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட தினம் இந்திய ஜனநாயகத்திற்கான மோசமான நாள் என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
 
மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக முக்கிய குற்றவாளியான யாகூப் மேமனுக்கு நாக்பூர் ஜெயிலில் இன்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. யாகூப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஆதரவும் எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 
 
இந்த நிலையில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட தினம் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு மோசமான நாள் என்று பிரபல வழக்கறிஞரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "எனது பார்வையில், யாகூப்புக்கு தூக்கு நிறைவேற்றப்பட்ட தினம் இந்திய ஜனநாயகத்திற்கும், நீதித்துறைக்கும் ஒரு மோசமான நாளாக நான் கருதுகிறேன். 
 
யாகூப் மேமன் தாக்கல் செய்த புதிய மனுவை ஏற்று நள்ளிரவில் விசாரணை நடத்தியதை நான் பாராட்டுகிறேன். ஆனால் அதே வேளையில் யாகூப்புக்கு வழங்கப்பட்ட முடிவை நீதிக்கு ஏற்பட்ட கருச்சிதைவாகவே நான் கருதுகிறேன்" என்றார்.