வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: புதன், 13 ஆகஸ்ட் 2014 (11:19 IST)

அரசியல் கட்சிகள் ஊடக நிறுவனங்களை நடத்த அனுமதிக்கக் கூடாது - டிராய்

அரசியல் கட்சிகள் ஊடக நிறுவனங்களை நடத்த அனுமதிக்கக் கூடாது என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வலியுறுத்தியுள்ளது.

ஊடக நிறுவனங்கள் உரிமம் தொடர்பான பிரச்னைகளைக் களைவது குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையைத் தில்லியில் டிராய் தலைவர் ராகுல் குல்லார் வெளியிட்டார்.

இது குறித்து ராகுல் குல்லார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“தொலைக்காட்சி, பத்திரிகை நிறுவனங்களை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள், மதச்சார்பு அமைப்புகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சகங்கள், அரசு நிதிபெறும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி தரக் கூடாது.

இந்த அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள், துணை நிறுவனங்களுக்கும் ஊடக நிறுவனங்கள் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். மேற்கண்ட அமைப்புகள் ஊடக நிறுவனங்களை ஏற்கெனவே நடத்திவந்தால் அதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

தனிநபர்களால் நடத்தப்படும் ஊடக நிறுவனத்தில் உரிமையாளரின் முதலீட்டு பங்குரிமை 32 சதவீதமாக வரையறுக்கப்பட வேண்டும். பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய இரண்டையும் ஒரு சேர நடத்திவந்தாலும் இதே அளவு பங்கு உரிமைதான் அளிக்க வேண்டும்.

பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவனங்களுக்கென தனியாக ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும். இதற்கென தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும். இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்.

கையூட்டுச் செய்திகளை வெளியிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட செய்தியை அளித்த நபர் மற்றும் ஊடக நிறுவனத்தை தண்டிக்கவும், அபராதம் விதிக்கவும் கூடிய அதிகாரத்தை இந்த ஆணையத்துக்கு வழங்க வேண்டும். இதன் உறுப்பினர்களாக ஊடகத் துறைக்குச் சம்பந்தமில்லாதவர்களை நியமிக்க வேண்டும்.

பெரு வணிக நிறுவனங்களால் நடத்தப்படும் ஊடக நிறுவனங்களின் சில செயல்பாடுகள் தரம் தாழ்ந்துவிட்டன. அந்த நிறுவனங்களின் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் வியாபார நோக்கில் உள்ளன“ என்று ராகுல் குல்லார் தெரிவித்தார்.