வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 25 டிசம்பர் 2016 (08:33 IST)

அன்பும் அமைதியும் நிலவட்டும் - தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து

உலகமெங்கும் இன்று கிறிஸ்துமஸ் பண்டைகை கொண்டாடப்படுவதால் பல்வேறு அரசியல் தலைவர்கள் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


 

 
தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் “அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன் என்று அன்பின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைத்த இயேசுபிரான் பிறந்த திருநாள் கிறிஸ்துமஸ். அவர் போதித்த தியாகம், இரக்கம், பொறுமை, எளிமை, ஈகை போன்ற உயரிய வாழ்க்கை நெறிகளை மக்கள் பின்பற்றி ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்ந்தால் வாழ்வு மேன்மையுறும்.
 
இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் புனிதப் பயணம் செல்வதற்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2011-ஆம் ஆண்டில் செயல்படுத்தினார். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 2,340 பேர் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
 
கிறிஸ்தவர்களின் பெருமக்களின் மேம்பாட்டுக்கென மறைந்த ஜெயலலிதா வகுத்த சீரிய திட்டங்களை, அவர் காட்டிய வழியில் செயல்படும் அரசு சிறப்பான முறையில் தொடர்ந்து செயல்படுத்தும். இயேசு பிறந்த கிறிஸ்துமஸ் திருநாளில், உலகமெங்கும் அன்பும், அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்:
 
அல்லவைகளை நீக்கி, இடர்ப்பாடுகளில் உள்ளோருக்கு உதவுவதும், அவர்களது துன்பங்களில் பங்கு கொள்வதுமே இயேசு பிரானின் பிறப்பு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
எனவே, இந்த நன்னாளில் அன்பு, இரக்கம், அமைதி ஆகியவற்றை கொண்டு சமத்துவ உலகம் படைப்போம். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
 
திமுக தலைவர் கருணாநிதி: 
 
கிருத்துவப் பெருமக்களின் தொண்டுகளைப் போற்றி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்த காலங்களிலெல்லாம் அப்பெருமக்களுக்குச் சிலைகள் எடுத்துச் சிறப்பித்ததுடன்; கிருத்துவ மக்களின் மேம்பாட்டிற்காக எண்ணற்ற பல சலுகைகளை வழங்கிய நிகழ்வுகளையெல்லாம் நான் நினைவுகூர்ந்து, கிருத்துவ சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் பெருகிட எனது கிருத்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பாமக நிறுவனர் ராமதாஸ் :
 
அன்பு, கருணை மற்றும் சகிப்புத் தன்மையின் அடையாளமான இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று இயேசுபிரான் விரும்பினார். ஏழைகளிடத்திலும், பாவிகளிடத்திலும் அன்பு காட்டினார். மனிதர்களை மட்டுமின்றி, விலங்குகளையும் நேசித்தார். உன் மீது நீ அன்பு காட்டுவதைப் போல அடுத்தவர் மீதும் நீ அன்பு காட்டுவாயாக! என்று அன்பின் மகத்துவத்தை புரிய வைத்தவர். ஆனால், இந்தியாவில் அண்மைக் காலமாக சகிப்புத்தன்மை குறைந்து வருவது மிகுந்த வருத்தத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது.
 
‘‘தந்தையே இவர்களை மன்னியும்... ஏனெனில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே இவர்களுக்குத் தெரியவில்லை’’ என்றார் இயேசுபிரான். அவரது இந்த போதனையை மனதில் கொண்டு, மற்றவர்களின் தவறுகளை மன்னித்து, நாட்டில் அமைதி நிலவவும், போட்டி பொறாமைகள் அகலவும், ஏழைகளின் துயரங்கள் நீங்கவும் உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.