1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2015 (00:21 IST)

லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ராமதாஸ் கோரிக்கை

லாரிகள் வேலை நிறுத்தத்தை உடனே முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுக்கு பாமக கோரிக்கை விடுத்துள்ளது.
 

 
இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் 4ஆவது நாளாக தொடகிறது. இந்த போராட்டத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளில் முதன்மையானது நாடு முழுவதும் உள்ள 373 சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு பயணத்திற்கும் சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக ஆண்டுக்கு ஒருமுறை கட்டணமாக நியாயமான தொகையை நிர்ணயித்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகும். இந்தக் கோரிக்கை நியாயமானது.
 
இந்தியாவில் அதிக போக்குவரத்து நடக்கும் 62 நெடுஞ்சாலைகள் மொத்தம் ரூ.13,415 கோடி செலவில் மேம்படுத்தப் பட்டன. இச்சாலைகளில் மட்டும் இதுவரை ரூ.21,897 கோடி சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு- திண்டிவனம் இடையிலான சாலை அமைக்க ரூ.80கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டது.
 
ஆனால், செங்கல்பட்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி மூலமாக மட்டும் 10 ஆண்டுகளில் ரூ.2868 கோடி சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பதாக உத்தேச கணக்கீட்டில் தெரியவந்திருக்கிறது.
 
ஒரு நெடுஞ்சாலைக்காக செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்டு விட்டால், அந்த சாலையில் முழுமையான சுங்க வரி வசூலிப்பது நிறுத்தப்பட்டு, பராமரிப்புக்காக மட்டும் 30% கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது விதியாகும்.
 
ஆனால், அனைத்துச் சாலைகளிலும் முழுமையான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவதையும், இதை முறைப்படுத்தி லாரி  வேலைநிறுத்தத்தை தடுக்க வேண்டும் என்றும் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி, செப்டம்பர் 25 ஆம் தேதி ஆகிய தேதிகளில் வெளியிட்ட அறிக்கைகளில் வலியுறுத்தி இருந்தேன்.
 

ஆனால், அதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்காததன் விளைவு லாரி  வேலை நிறுத்தம் தொடங்கி, அதனால் மக்கள் பாதிப்புகளை எதிர் கொண்டு வருகின்றனர்.
 
கடந்த 3 நாட்களாக தமிழகத்திலுள்ள 7 லட்சம் லாரிகள் உட்பட நாடு முழுவதும் 93 லட்சம் லாரிகள் ஓடாததால் மொத்தம் ரூ.35,000 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை காய்கறிகள், பழங்கள், முட்டைகள், இறைச்சிக் கோழிகள் என எளிதில் வீணாகக் கூடிய பொருட்கள் என்பதால் அவற்றின் உரிமையாளர்களுக்கு சமாளிக்க முடியாத அளவுக்கு இழப்பு ஏற்படும்.
 
கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுவது நின்று விட்டதால், காய்கறிகள் வீணாகி உழவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது; காய்கறிகளின் விலை உயர்ந்து கேரள மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
வட மாநிலங்களில் இருந்து சேலத்திற்கு வந்துள்ள பருப்பு வகைகளை எடுத்துச் செல்ல முடியாததால் அவை தொடர்வண்டியிலேயே வைக்கப்பட்டு, அதற்காக கூடுதல் வாடகை செலுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே பருப்பு விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் இது மேலும் விலை உயர வழி வகுக்கும்.
 
லாரிகள் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் தாக்கம் பொது மக்களை இன்னும் நேரடியாக சென்றடையவில்லை என்றாலும், அடுத்த சில நாட்களில் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும். டேங்கர் சரக்குந்துகள் இன்று முதலும், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் நாளை முதலும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கப் போவதாக அறிவித்திருப்பதால் நிலைமை மோசமடையும் வாய்ப்புக்கள் இருக்கின்றன.
 
அதுமட்டுமின்றி, தொடரும் வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் மட்டும் 50 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் லாரிகள் உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஏற்க மத்திய அரசு மறுக்கிறது. இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசுக்கு தமிழக அரசு இதுவரை எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.
 
சுங்கச் சாவடிகள் பிரச்சினையை லாரி உரிமையாளர்களின் பிரச்சினையாக மட்டும் பார்க்கக் கூடாது. நடுத்தர வர்க்கத்தினரில் பெரும்பான்மையானவர்கள் மகிழுந்துகளை பயன்படுத்தத் தொடங்கி விட்ட நிலையில், பேரூந்து கட்டணத்தை விட அதிக தொகையை சுங்கக் கட்டணமாக செலுத்த வேண்டியிருப்பது அவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அது எரிமலையாக வெடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
 
எனவே, லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை மட்டுமின்றி, மக்களின் உணர்வுகளையும் மதித்து லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.