வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 26 நவம்பர் 2015 (07:42 IST)

நாடாளுமன்றத்தில் சகிப்பின்மை குறித்த பிரச்சினையை எழுப்புவோம்: ராகுல் காந்தி

நாடாளுமன்ற கூட்டத்தின்போது சகிப்பின்மை குறித்த பிரச்சினை எழுப்புவோம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.


 

 
ராகுல் காந்தி பெங்களூருவில் தனியார் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். அதைத்தொடர்ந்து ராகுல் காந்தி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
 
அந்தப் பேட்டியில் ராகுல் காந்தி கூறியதாவது:-
 
நாட்டில் நிலவும் சகிப்பின்மை பிரச்சினையை நாடாளுமன்ற கூட்டத்தில் எழுப்புவோம். இந்த பிரச்சினை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) திட்டத்திற்கு பெரும் இடையூறு ஏற்படுத்துகிறது.
 
இந்த ஜிஎஸ்டி மசோதாவைக் கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சிதான். நாங்கள் இதை ஆதரிக்கிறோம். ஆனால் முன்பு பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது இதை எதிர்த்தது.
 
இதற்காக நாடாளுமன்ற கூட்டத்தை 3 ஆண்டுகள் நடத்தவிடாமல் பாஜக வினர் முடக்கினர். ஜிஎஸ்டி மசோதாவில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே 3 வேறுபாடுகள் உள்ளன.
 
வரி மீதான உச்சவரம்பு, பிரச்சினைக்கு தீர்வு, மாநிலங்களுக்கு இடையே விற்கப்படும் பொருள்களுக்கு 1 சதவீத வரி ஆகியவற்றை சேர்க்க வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம்.
 
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் இது குறித்து சில ஆலோசனைகளை கூறியுள்ளது. இதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 
மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது எதிர்க்கட்சி தலைவர்களை தொலைபேசியில் அழைத்து ஆலோசனை கேட்பார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை காங்கிரஸ் தலைவர்களை தொடர்பு கொண்டு ஒரு ஆலோசனையை கூட கேட்டது இல்லை.
 
சகிப்பின்மை விஷயத்தில் போர்வையால் மூடிக்கொண்டு தாக்குவதால் எந்த தீர்வும் கிடைக்காது. தங்களது கருத்தை தெரிவிக்கும் சிலருக்கு எதிராக கோஷம் போடுவது மிக எளிதானது.
 
ஆனால் சிலரின் எண்ணங்களை காது கொடுத்து கேட்பது என்பது மிக முக்கியமானது. சகிப்பின்மை தொடர்பாக நாட்டில் என்ன நடைபெற்று கொண்டிருக்கிறதோ அதை நான் விரும்பவில்லை. ஒரு இந்தியனாக அது எனது அமைதியை கெடுக்கிறது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
 
இந்த பரபரப்பான சூழலில் இன்று நாடாளுமன்றம் கூடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.