வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 20 ஏப்ரல் 2015 (06:49 IST)

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்

ஒரு மாத கால விடுமுறைக்கு பின், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு மிகவும் தீவிரமாக உள்ளது.
 

 
இந்த ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது.
 
பிப்ரவரி 26ஆம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 27ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 20ஆம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி முடிவடைந்தது.
 
அந்த முதல் பகுதி கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. நிலம் கையகப்படுத்தும் மசோதாவையும் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு முயன்றது. ஆனால் இந்த மசோதா விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்று கூறி எதிர் கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 
என்றாலும் நாடாளுமன்ற மக்களவையில் ஆளும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் அங்கு நிலம் கையகப்படுத்தும் மசோதா எளிதில் நிறைவேறியது. ஆனால் மேல்-சபையில் எதிர்க்கட்சிகளுக்கே அதிக பலம் இருப்பதால் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றமுடியவில்லை.
 
இதற்கிடையே, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டம் காலாவதியாக இருந்த நிலையில், அது தொடர்பான அவசர சட்டத்தை கடந்த 3ஆம் தேதி மத்திய அரசு மீண்டும் பிறப்பித்தது. அரசியல் சட்டத்தின் 123(2)(ஏ) பிரிவின்படி ஜனாதிபதி இந்த அவசர சட்டத்தை பிறப்பித்தார்.
 
இந்த நிலையில் ஒரு மாத விடுமுறைக்கு பின், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்ட கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் மே மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறும். இதேபோல் டெல்லி மேல்-சபை வருகிற 23ஆம் தேதி (வியாழக்கிழமை) கூடி மே 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
 
இந்த 2வது கட்ட கூட்டத்தொடரில் இரு சபைகளும் 13 நாட்கள் கூடும்.
 
மேலும் அடுத்த பக்கம்..

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கூறி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது.
 
என்றாலும், முதல் நாளான இன்றே அவசர சட்டம் தொடர்பான நிலம் கையகப்படுத்தும் புதிய மசோதாவை (நிலம் கையகப்படுத்துதல், புனரமைப்பு மற்றும் மறுகுடியமர்த்துதலில் நியாயமான இழப்பீடு பெறும் உரிமை திருத்த மசோதா) மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது.
 
இன்று சபை கூடியதும் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ மற்றும் இரு முன்னாள் எம்.பி.க்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். அது முடிந்ததும் நாடாளுமன்ற விவகார ராஜாங்க அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி மசோதாவை தாக்கல் செய்வார்.
 
எதிர்க்கட்சிகள் தங்கள் நிலையில் உறுதியாக இருந்த போதிலும், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு மிகவும் தீவிரமாக இருக்கிறது. இது தவிர சரக்கு மற்றும் சேவை வரிகள் மசோதா, வெளிநாட்டில் சேர்த்துள்ள சொத்து மற்றும் வருமானத்தை தெரிவிக்க வகை செய்யும் மசோதா, ரியல் எஸ்டேட் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்துதல்) மசோதா உள்ளிட்ட மேலும் சில முக்கிய மசோதாக்களையும் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
 
நிலம் கையகப்படுத்தும் மசோதா காலத்தின் கட்டாயம் என்பதால் அதை நிறைவேற்ற ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சிகளை நாடாளுமன்ற விவகார அமைச்சர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டிருக்கிறார்.
 
இந்த மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகளில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும் என்பதால் நாடாளுமன்ற கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பாஜக எம்.பி.க்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.