வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 6 நவம்பர் 2014 (08:41 IST)

பாகிஸ்தானை சேர்ந்த தாலிபான் தீவிரவாதிகள் மோடிக்கு கொலை மிரட்டல்

பாகிஸ்தானை சேர்ந்த தாலிபான் தீவிரவாதிகள் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அப்பாவிகள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்குவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
 
இந்தியா-பாகிஸ்தான் இடையில் உள்ள வாகா எல்லையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், 61 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தாலிபான் இயக்கத்தில் இருந்து பிரிந்த பாகிஸ்தான் ஜமாத் அரார் என்ற இயக்கம் பொறுப்பு ஏற்றுக்கொண்டது.
 
இவர்களுக்கு அல்-கொய்தா இயக்கத்துடனும் தொடர்பு உள்ளது. தாலிபான்களைப் போல இல்லாமல், பாகிஸ்தானை தாண்டி, இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் குறிவைத்து அந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வாகா எல்லை தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் ஜமாத் அரார் இயக்கம் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
 
இதுகுறித்து அதன் செய்தித்தொடர்பாளர் எசானுல்லா எசான், ‘டுவிட்டர்’ வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது:-
 
நீங்கள் (நரேந்திர மோடி) நூற்றுக்கணக்கானவர்களை கொன்ற கொலைகாரர். குஜராத்திலும், காஷ்மீரிலும் உள்ள அப்பாவி மக்களின் ரத்தம் படிந்ததால், உங்கள் கரங்கள், சிவப்பாக மாறி உள்ளன. அதற்கு நீங்கள் உரிய விலை கொடுத்தே தீர வேண்டும். அந்த அப்பாவிகள் கொல்லப்பட்டதற்கு உங்களை நாங்கள் பழி தீர்ப்போம்.
 
எல்லையை ஒட்டி பாகிஸ்தான் பகுதியில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த முடியும்போது, எல்லைக்கு அப்பால் இந்திய பகுதியிலும் எங்களால் எளிதாக தாக்குதல் நடத்த முடியும். இதை மோடிக்கு தெரிவித்துக்கொள்கிறோம். எனவே, இந்தியாவிலும் தாக்குதலை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று டுவிட்டர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த டுவிட்டர் கணக்கு போலியானது அல்ல என்பதை இந்திய உளவு அமைப்பினர் உறுதி செய்துள்ளனர். இதற்கிடையே இதே கருத்தை எசானுல்லா எசான் செய்தி நிறுவனமான ராய்டருக்கு அளித்த பேட்டியிலும் குறிப்பிட்டு இருக்கிறார். மோடியை எச்சரிப்பதாகவும், இந்தியாவில் தாக்குதல் நடத்தும் காலம் நெருங்கி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
தாலிபான்களின் இந்த பகிரங்க கொலை மிரட்டல் காரணமாக, இந்தியாவில் பாதுகாப்பு அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, தீவிரவாத இயக்கங்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவது குறித்து பிரதமர் மோடியிடம் பாதுகாப்பு அமைப்புகள் அவ்வப்போது எடுத்துரைத்து வருகின்றன.
 
அல்-கொய்தா இயக்கம், இந்தியாவிலும் தனது கிளையை தொடங்குவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. அதிலிருந்தே, நாடு முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
கொல்கத்தா துறைமுகத்தை தீவிரவாதிகள் தாக்க திட்டமிட்டுள்ளதாக நேற்று முன்தினம் மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. இதையடுத்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு போர் படகுகளை இந்திய கடற்படை வாபஸ் பெற்றுக்கொண்டது. துறைமுகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.