வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (09:40 IST)

எதிர்க்கட்சிகளைப் பற்றி சர்ச்கைக்குரிய விமர்சனம்: மன்னிப்பு கேட்டார் வெங்கையா நாயுடு

எதிர்க்கட்சிகளை விமர்சித்ததற்காக, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு மன்னிப்பு கேட்டார்.
 
நாடாளுமன்றத்தில் குடியரத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசும்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக தாக்கினார்.
 
இது குறித்து அவர் பேசுகையில், 'எங்களைப் பற்றி விமர்சிக்கும் முன்பு காங்கிரஸ் தாங்கள் முன்பு செய்த காரியங்கள் பற்றி உள்ளார்ந்து சிந்திக்க வேண்டும். அப்படி உள்ளார்ந்து சிந்திக்க முடியவில்லை என்றால் எங்காவது தூரமான இடங்களுக்கு தனிமையில் சென்று சிந்தித்துப் பார்க்கலாம்' என்று கூறினார்.
 
மேலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை 'கன்ஸ்யுமர் பிரைஸ் இன்டெக்ஸ்' என்று குறிப்பிட்டார். தெலுங்கானா ராஷ்டிர சமிதியையும் விமர்சித்தார்.
 
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அனைவரும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் 9 கட்சிகள் புகார் தெரிவித்தன.
 
இந்நிலையில், நாடாளுமன்றம் தொடங்குவதற்கு முன்னர், ரயில்வே பட்ஜெட் பிரதிகள், உள்ளே கொண்டு செல்லப்பட்டன. அப்போது, 9 கட்சிகளின் எம்.பி.க்களும், நாடாளுமன்றத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கூடினர். அதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொண்டார். வெங்கையா நாயுடு பேச்சுக்கு எதிராக போராடுவது என்று 9 கட்சிகளும் ஒருமனதாக முடிவு செய்தன.
 
இதையடுத்து, நாடாளுமன்றம் கூடியதும், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தானாகவே முன்வந்து விளக்கம் அளித்தார். தான் எப்போதும் அனைத்து கட்சிகளின் உணர்வுகளை மதிப்பதாகவும், யாரையும் காயப்படுத்துவது தனது நோக்கம் இல்லை என்றும் கூறினார்.
 
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, 'வெங்கையா நாயுடு மன்னிப்பு கோரவேண்டும்' என்று கூறினார். மேற்கொண்டு இந்தப் பிரச்சினையை வளர்க்க வேண்டாம் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறினார்.
 
இதனை ஏற்றுக் கொள்ளாத காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.பி.க்கள் சபாநாயகர் இருக்கையை நோக்கி முன்னேறிச் சென்று கோஷங்களை எழுப்பினார்கள். அமளி தொடர்ந்ததால் சபாநாயகர் அவையை 11.30 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
 
இதைத் தொடர்ந்து, சபை மீண்டும் கூடியதும் அமளி தொடர்ந்ததால், காலை 11.45 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மீண்டும சபை கூடியபோது, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வெங்கையா நாயுடு ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி அழைத்துப் பேசினார்.
 
பின்னர், தான் கூறிய விமர்சனத்துக்கு வெங்கையா நாயுடு மன்னிப்பு கேட்டார்.