செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : ஞாயிறு, 20 ஏப்ரல் 2014 (20:49 IST)

ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை

ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால், ஓராண்டு சிறை தண்டனை விதிக்க முடியும் என தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் எச்சரித்தார்.
ஆந்திராவில் வரும் 30 ஆம் தேதியும், அடுத்த மாதம் 7 ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தலும், சட்டசபை தேர்தலும் நடக்க உள்ளன. தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட ஹைதராபாத் வந்த தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
சமாஜ்வாடி கட்சி தலைவர் அசம்கானுக்கும், பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் பிரச்சாரம் செய்ய தடை விதித்த தேர்தல் ஆணையம், அமித் ஷா மீதான தடையை விலக்கிக்கொண்டது. ஆனால் அசம்கான் மீதான தடை தொடர்கிறது. இதனால் தங்கள் மீது தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக சமாஜ்வாடி குற்றம்சாற்றியுள்ளது. இது குறித்து வி.எஸ்.சம்பத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், “தனிப்பட்ட நபர்களின் குற்றச்சாற்றுகளை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்வதில்லை. பொது விவாதங்களுக்குள்ளும் நாங்கள் ஈடுபடுவதில்லை. இப்படிப்பட்ட குற்றச்சாற்றுகள் ஒவ்வொரு நேரத்திலும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அத்தகைய சர்ச்சையில் சிக்கிக்கொள்ள மாட்டோம்” என்றார்.
 
தேர்தல் கமிஷனின் தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடப்போவதாக அசம்கான் கூறியிருப்பது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு வி.எஸ்.சம்பத், “தனிப்பட்ட நபர்களின் குற்றச்சாற்றுகளுக்குள் செல்வதில்லை” என பதில் அளித்தார்.
 
அமித் ஷாவுக்கு வழங்கியதுபோன்று அசம்கானுக்கும் நிவாரணம் வழங்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்விக்கணை தொடுத்தனர். அப்போது தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத், “நிவாரணம் விரும்புகிறாரா, இல்லையா என்பது குறித்து அவர்தான் முடிவு எடுக்க வேண்டும்” என பதில் அளித்தார்.
 
மேலும் அவர் கூறியதாவது:-
 
இங்கு தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட்டோம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தோம். அவர்கள் நல்ல யோசனைகளை, நடைமுறைக்கு உகந்த யோசனைகளைக் கூறினர். அவர்கள் தேர்தல் நிர்வாகத்தில் தேர்தல் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறினார்கள்.
 
ஆந்திராவில் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.105 கோடி கைப்பற்றப்பட்டது. நாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட தொகையில் இது 46 சதவீதம் ஆகும்.
 
வாக்காளர்கள் ஓட்டுக்கு லஞ்சம் பெற்றால் அவர்கள் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 171-பி படி வழக்கு தொடர தகுதியானவர்கள். இந்த பிரிவின்படி ஓராண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்க முடியும்.
 
இவ்வாறு சம்பத் கூறினார்.