செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 28 நவம்பர் 2015 (09:53 IST)

இந்தியா என்பதுதான் எனது அரசின் ஒரே மதம், அரசியல் சட்டம்தான் புனித நூல்: நரேந்திர மோடி

இந்தியா என்பதுதான் எனது அரசின் ஒரே மதம், அரசியல் சட்டம்தான் ஒரே புனித நூல் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.


 

 
கடந்த இரண்டு நாட்களாக அரசியல் சட்டம் குறித்த விவாதம், நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இது குறித்துப் பேசினார்.
 
நாமாளுமன்றத்தில் நரேந்திர மோடி பேசுகையில், "இந்த சபையில் அமர்ந்து, அரசியல் சட்டம் தொடர்பான விவாதத்தில் ஆர்வம் காட்டிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 
 
விவாதத்தின் முடிவில்தான், பிரதமர் பதில் அளித்து பேசுவார் என்ற தவறான எண்ணம் சிலரிடையே ஏற்பட்டு இருக்கலாம். ஆனால், மற்ற எல்லோரையும் போலவே, நானும் நடுவிலேயே பேசுகிறேன்.
 
இந்த சபையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிறப்பாக பேசினார். சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேச்சு அருமையாக இருந்தது. அவரது பேச்சு, நாடாளுமன்ற வரலாற்றில் அனைவருக்கும் உந்துசக்தி அளிக்கக்கூடிய ஆவணமாக திகழும் என்று நம்புகிறேன். அவருக்கு எனது வாழ்த்துகள்.
 
இங்கு ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் உணர்வு, "எனக்கு" என்றோ, "உனக்கு" என்றோ இல்லை. "நமக்கு" என்றே அமைந்துள்ளது.
 
நவம்பர் 26 ஆந் தேதியின் அரசியல் சட்ட தினம் கொண்டாட்டம், ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் குடியரசு தினத்தின் முக்கியத்துவத்தை குறைத்துவிடப்போவதில்லை. 
 
நமது அரசியல் சட்டம், ஒற்றுமையான இந்தியாவை வலியுறுத்துவதுடன், அனைத்து இந்தியர்களுக்கும் கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்துகிறது.
 
அமெரிக்க அரசியல் சட்டத்தை வகுத்தவர், "மனிதன் அழிவற்றவனாக இருக்க முடியாது. ஆனால், அரசியல் சட்டம் அழிவற்றதாக இருக்க வேண்டும்" என்று கூறினார். அதையே இங்கு நினைவுபடுத்துகிறேன்.
 
இந்தியா, பல்வேறு மாறுபட்ட கலாசாரங்களை கொண்டது. அத்தகைய மாறுபட்ட மக்கள் அனைவரையும் கட்டுப்படுத்தும் அதிகாரம், அரசியல் சட்டத்துக்கு உள்ளது. அதன் புனிதத் தன்மையை பாதுகாப்பது நமது பொறுப்பு.
 
அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், தான் தலித் என்பதால், தான் அனுபவித்த பாரபட்சத்தை அரசியல் சட்டத்தில் வெளிப்படுத்தவில்லை. அதில்தான் அவரது பெருமை அடகியுள்ளது.
 
அரசியல் சட்டத்தை உருவாக்க நமது மாபெரும் தலைவர்கள் எப்படி ஒற்றுமையுடன் பாடுபட்டனர் என்பதை இன்று தெரிந்து கொள்ளலாம். நாட்டின் விடுதலைக்காக தங்கள் உயிரையே கொடுத்தவர்களை நினைத்து நாம் பெருமைப்படுகிறோம்.
 
அரசியல் சட்டம் மூலம், தலித், ஒடுக்கப்பட்டோர், ஏழைகள் ஆகியோருக்கு எப்படி உதவலாம் என்பதுதான் நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். அரசியல் சட்டத்தின் வலிமை மற்றும் முக்கியத்துவம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
 
நாட்டில் 80 கோடி இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும். கருது ஒற்றுமைதான், ஜனநாயகத்தின் மாபெரும் பலம். எனவே, மெஜாரிட்டி பலத்தின் மூலம், முடிவுகளை வலுக்கட்டாயமாக திணிக்க மாட்டோம்.
 
கருத்தொற்றுமை ஏற்படுத்த பாடுபடுவோம். "முதலில் இந்தியா" என்பதுதான், எனது அரசின் ஒரே மதம். அரசியல் சட்டம்தான், எங்களின் ஒரே புனித நூல். அனைத்து பிரிவு மக்களுக்காகவும் இந்த அரசு பாடுபடும்.
 
இன்றைய இந்தியா, மன்னர்களுக்கும், பிரதமர்களுக்கும் மட்டும் சொந்தமானது அல்ல. இது ஒவ்வொரு இந்தியனுக்கும் சொந்தமானது. இந்த தேசத்தை கட்டி எழுப்ப அடுத்தடுத்து வந்த எல்லா அரசுகளும் தங்கள் பங்கை செலுத்தி உள்ளன.
 
இந்த அரசு எதுவும் செய்யவில்லை, அந்த அரசு எதுவும் செய்யவில்லை என்று சொல்ல முடியாது. நான் சுதந்திர தினத்தன்று, டெல்லி செங்கோட்டையில் ஆற்றிய உரையில் கூட, இந்த நாட்டின் வளர்ச்சிக்கு எல்லா அரசுகளும், பிரதமர்களும் தங்கள் பங்கை ஆற்றியுள்ளனர் என்று தெரிவித்தேன்.
 
இதற்கு முன்பு வேறு எந்த பிரதமராவது, செங்கோட்டையில் ஆற்றிய உரையில், இந்த உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்களா எனறு எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால், அப்போது மட்டுமல்ல, இந்த சபையிலும் நான் இந்த உண்மையை ஒப்புக்கொள்கிறேன்.
 
எனவே, நேரு உள்ளிட்ட முந்தைய தலைவர்களின் பெருமைகளை இந்த அரசு மூடி மறைக்கப் பார்ப்பதாக குற்றம் சாட்டப்படுவதில் உண்மை இல்லை.
 
இந்த நாடு முன்னேறுவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. அதை நாடாளுமன்றத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், மக்களுக்கும் எட்ட பாடுபடுவோம்." என்று நரேந்திர மோடி பேசினார்.