வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By caston
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2015 (17:55 IST)

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்: ஆன்லைன் நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு

பெங்களூரை சேர்ந்த நிஞ்சாகார்ட் மற்றும் டெல்லியை சேர்ந்த எஸ்ஆர்எஸ் என்ற ஆன்லைன் நிறுவனங்கள் ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளன. நேற்று முதல் மூன்று நாட்களுக்கு அதாவது நாளை வரைதான் இந்த சலுகை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களாக வெங்காயத்தின் விலை 60, 80, 100 என உயர்ந்து கொண்டே சென்றது. இதனால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த விலை உயர்வை தடுக்க மத்திய அரசு ஏற்றுமதி கட்டுப்பாடுகளையும், இறக்குமதி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. சில மாநில அரசுகள் பொது மக்களின் சுமையை குறைக்க மலிவு விலையில் வெங்காய விற்பனையும் செய்தது.  ஆனால் இப்போது பெங்களூரை சேர்ந்த நிஞ்சாகார்ட் மற்றும் டெல்லியை சேர்ந்த எஸ்ஆர்எஸ் என்ற ஆன்லைன் நிறுவனங்கள் ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அரசாங்கத்தையே மிஞ்சிவிட்டது.

இதுகுறித்து எஸ்.ஆர்.எஸ் ஆன்லைன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதிக் ஜின்டால் கூறுகையில், கடந்த வாரம் ஒரு கிலோ வெங்காயம் ரூ 19 க்கு விற்பனை செய்தோம். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. 4000 ஆர்டரில் 3500 ஆர்டர் வெங்காயத்துக்கு மட்டுமே கிடைத்தது. வாடிக்கையாளர்களிடம் கிடைத்த இந்த வரவேற்பை அடுத்து தற்போது இந்த சலுகையை  அறிவித்துள்ளோம் என்றார். நிஞ்சாகார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆசுதோஷ் விக்ரம் கூறுகையில் நாங்கள் 10 டன் வெங்காய விற்பனையை எதிர்பார்க்கிறோம். எங்கள் நிறுவனத்தின் செயலியை வாடிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்த இந்த  வாய்ப்பை பயன்படுத்த உள்ளோம் என்றார்.