1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 5 ஆகஸ்ட் 2015 (17:04 IST)

யாகூப் மேமனை தூக்கிலிட்டது சரிதான்: சசி தரூருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதிலடி

டைகர் மேமனை பிடித்து தண்டிக்க முடியாததால், அவரது சகோதரர் யாகூப் மேமன் தூக்கிலிட்டதாக குறை கூறுவதை ஏற்க முடியாது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறினார்.
 

 
மும்பையில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசும்போது, "யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டது குறித்து சிலர் ட்விட்டரில் தெரிவித்த கருத்துக்களை பார்த்தேன். இந்த விவகாரத்தில் நாட்டின் பெரும்பான்மையான மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டே, யாகூப் மேமனுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
 
2001 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட பிறகு, 'அமெரிக்கா சுதந்திரத்துக்கு மதிப்பளித்தாலும், அதனால் நாட்டின் பாதுகாப்பு பாதிக்கப்படுமேயானால் அமைதி காக்க மாட்டோம்' என்று அப்போதைய அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் கூறினார்.
 
இந்தியாவும் தனது வலிமையை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று உணர்ந்துள்ளது. தேவையில்லாமல் பொறுமை காத்து வந்தால் நாட்டில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எதையும் நடுநிலைத் தன்மையுடன் அணுக வேண்டுயது அவசியம். இதையே, நாம் பின்பற்றும் மத நூல்கள் வலியுறுத்துகின்றன.
 
டைகர் மேமனை பிடித்து தண்டிக்க முடியாததால், யாகூப் மேமன் பழிவாங்கப்பட்டார் என்று கூறப்படுவது உண்மையல்ல. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சட்டரீதியாகவே தண்டிக்கப்பட்டார்" என்றார் தோவல்.
 
யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. சசி தரூர் ட்விட்டரில் தனது கருத்தை பகிர்ந்திருந்தார். அதில், "அரசு நிறைவேற்றும் கொலைகளின் மூலம், நமது தரத்தைக் குறைத்துக் கொள்ளக்கூடாது. பயங்கரவாதிகளுக்கு பரோலற்ற, ஆயுள் முழுதும் சிறையில் இருக்கும் தண்டனை அளிக்க வேண்டும்.
 
முந்தைய காலங்களில்தான் கொலை செய்பவர்களுக்கு கொலைதான் தீர்வு என்ற நம்பிக்கை நிலவியது, அந்த வழக்கொழிந்த நடைமுறையை நாம் இப்போது ஏன் அனுமதிக்க வேண்டும்?" என்று தெரிவித்திருந்தார்.
 
சசி தரூரை நேரடியாக குறிப்பிடாத தோவல் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.