வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.vadivel
Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (22:50 IST)

தேர்தல் வாக்குறுதி என்னானது? புதுவை முதல்வர் ரெங்கசாமிக்கு காங்கிரஸ் கேள்வி

சட்டமன்ற தேர்தலின் போது கூறப்பட்ட வாக்குறுதிகளை ரெங்கசாமி அரசு செய்யவில்லை என புதுவை காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
 
இது குறித்து, புதுவை மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
புதுவையில் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 30 கிலோ அரிசி வழங்குவோம் என்றனர்.
 
மேலும், ஒவ்வொரு வீட்டிற்கும் இலவச மிக்சி,   கிரைண்டர், வாஷிங் மெஷின், பிரிட்ஜ், வீட்டுக்கு ஒரு இளைஞருக்கு அரசு வேலை, முதியோர் உதவித் தொகை ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதிகளை அள்ளி வழங்கினர். ஆனால், ரெங்கசாமி அரசு அமைந்து 4 வருடங்கள் ஆன போதும், தேர்தல் அறிக்கையில் கூறியதை எதையும் செய்யவில்லை.
 
தற்போதுதான், புதுவையில் இலவச மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை முதல்வர் வழங்கி வருகிறார். ஆனால், தேர்தலின் போது கூறிய அனைத்து வாக்குறுதிகளையும்  நிறைவேற்றியது போன்று புதுவை ரெங்கசாமி அரசு பம்மாத்து காட்டி வருகிறது. அது இனி  மக்களிடம் எடுபடாது என தெரிவித்துள்ளார்.