1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 29 ஜனவரி 2015 (12:30 IST)

நொய்டாவில் 20 பேரை கற்பழித்துக் கொலை செய்த குற்றவாளியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு

பள்ளிச் சிறுமிகள் உள்பட 20 பேரை பாலியல் பலாத்காரம் செய்து, கொன்று குவித்த நொய்டா கொலை குற்றவாளி  சுரேந்தர் கோலியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.
 
டெல்லியை அடுத்துள்ள நொய்டா பகுதியிலுள்ள நிதாரி கிராமத்தில் இளம் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்ந்து காணாமல் போயினர். தொடர்ந்து இந்த எண்ணிக்கை கூடிக் கொண்டே இருந்தது.
 
இந்நிலையில், காணாடமல்போன 26 வயதுடைய இளம்பெண் ஒருவரது தந்தை ரோஷன்லால் என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு உத்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இதைத் தொடர்ந்து காணாமல் போன பாயலின் என்ற அந்த இளம் பெண்ணின் செல்போன் எண்ணை காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், சுமார் ஒன்றை ஆண்டுகளுக்குப் பின்னர் திடீரென அந்த தொலைபேசி எண் மீண்டும் இயங்கத் தொடங்கியது. அதைப் பயன்படுத்திய சதீஷ் என்ற சுரேந்தர் கோலியை விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
 
அவரிடம் நடத்திய விசாரணையில், ஒரு ஆண்டுக்கு முன்னரே இளம் பெண் பாயலை கொலை செய்து ஒரு பங்களாவில் புதைத்து விட்டதாக காவல்துறையினரிடம் கோலி ஒப்புக் கொண்டார். இந்நிலையில் அந்தப் பங்களாவின் பின்புறம் உள்ள சாக்கடையை காவல்துறையினர் தோண்டிப் பார்த்தபோது.  அங்கு குவியல், குவியலாக மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் கிடைத்தன. 
 
இதைத் தொடர்ந்து, அவற்றைப் புல்டோசர் கொண்டு தோண்டத் தொடங்கினர், அப்போது, பங்களா காம்பவுண்ட் சுவருக்குப் பின்னால் உள்ள காலி நிலத்தில் கொலை செய்யப்பட்டவர்களின் துணிகள், செருப்புகள் மற்றும் குழந்தைகள் பள்ளிக்குக் கொண்டு செல்லும் பைகள், வளையல்கள், காதணிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் பாலிதீன் பைகளில் நிரப்பி போடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கோலியின் முதலாளி 52 வயதுடைய மொனிந்தர் சிங் பாந்தர் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த இருவரும் சேர்ந்து 17 இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து வெட்டிக் கொலை செய்து சாக்கடையில் வீசியதாக கூறப்பட்டது. இதனால் அவர்கள் மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் ஐந்து வழக்குகளில் இருவருக்கும் சிபிஐ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
 
பின்னர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தபோது, மொணீந்தர் சிங் பாந்தர் விடுவிக் கப்பட்டார். சுரீந்தர் கோலியின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை உறுதி செய்தன.
 
சுரேந்தர கோலி, தனது எஜமானாரான மொனிந்தர் சிங் பாந்தருக்குத் தெரியாமல், இளம் பெண்கள் மற்றும் குழந்தைகளை கொலை செய்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இதையடுத்து,  2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோலி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த காசியாபாத் சிபிஐ நீதிமன்றம், கோலிக்கு 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி தூக்கு தண்டனை விதித்தது.
 
இந்நிலையில், கோலியின் கருணை மனுவை தள்ளுபடி செய்யும்படி, மத்திய உள்துறை அமைச்சகம் செய்த பரிந்தரையை கடந்த ஜூலை 27 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, சுரேந்தர கோலியை தூக்கிலிடுவதற்கான வாரண்ட்டை உத்தர பிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்ட சிறைக்கு காசியாபாத் நீதிமன்றம் பிறப்பித்தது.
 
இந்த வழக்கில், சுரேந்தர் கோலிக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த அலாகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூடு, நீதிபதி பி.கே.எஸ்.பாகெல் அடங்கிய அமர்வு கோலியின் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளனர்.