1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (14:44 IST)

சுஷ்மா ஸ்வராஜை கிரிமினல் என்ற ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் - நிதின் கட்காரி

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை கிரிமினல் என்று கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிதின் கட்காரி கூறியுள்ளார்.
 
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆனால், ஒரு நாள் கூட நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முழுமையாக நடைபெறவிடாமல் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
தொடர்ந்து எதிர்கட்சிகள் லலித் மோடி விவகாரத்தையும், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் பதவி விலக வலியுறுத்தியும் எதிர்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வெருகின்றனர்.
 
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, ”முக்கிய விவகாரங்களை தாக்கல் செய்வது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க மற்ற கட்சிகள் தயார் நிலையில் இருக்கின்றன.
 
ஆனால், காங்கிரஸ் கட்சி மட்டுமே நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முட்டுக்கட்டை போடுகிறது. காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தின் மீதிருந்து நம்பிக்கையை இழந்துவிட்டது போல் தோன்றுகிறது” எனவும் கூறினார்.
 
மேலும், சுஷ்மா ஸ்வராஜை ’கிரிமினல்' என ராகுல் காந்தி தெரிவித்ததற்கு கட்காரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே கிரிமினல். ஆனால், சுஷ்மா மீது குற்றம் ஏதும் நிரூபிக்கப்படவில்லை. எனவே, இவ்விஷயத்தில் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.