வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: செவ்வாய், 3 நவம்பர் 2015 (09:07 IST)

சிறார் குற்றவாளியை விடுவிக்க நிர்பயாவின் பெற்றோர் எதிர்ப்பு

டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார கொலை வழக்கில் சிறார் குற்றவாளியை விடுவிக்க நிர்பயாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


 
 
டெல்லியில் கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16  ஆம் தேதி இரவு நண்பர் ஒருவருடன் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
 
அப்போது பேருந்தில் இருந்த 6 இளைஞர்கள் நிர்பயாவுடன்  வந்த ஆண் நண்பரை பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு, மாணவி நிர்பயாவை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.  படுகாயமடைந்த நிர்பயாவுக்கு  டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 
அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் பரிதாபமாக உயி்ரிழந்தார்.  அடுத்த நாள் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 6 பேரையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட 6 பேரில் ஒருவர் சிறுவன் என்பதால் அவர் சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
 
ஏனைய 5 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு அவர்கள் மீது விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சிறைக்குள் இருந்த  5 பேரில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மற்ற 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
 
குற்றவாளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில்  சீர்சிருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டிருக்கும்  சிறுவனுக்கான தண்டனைக் காலம் டிசம்பர் 16 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
 
எனவே அடுத்த மாதம் அந்த மைனர் குற்றவாளி விடுதலை ஆக உள்ளார். இந்நிலையில், சிறார் குற்றவாளியை விடுவிப்பதற்கு, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
 
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், யாகூப் மேமனுக்கு அவசர அவசரமாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள நிர்பயாவின் பெற்றோர், பெண்களின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில்  போதிய அக்கறை செலுத்தப்படவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளனர்.