வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 15 ஏப்ரல் 2015 (19:44 IST)

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய ரகசிய கோப்புகளை வெளியிடலாமா?: ஆய்வு செய்ய குழு அமைப்பு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய ரகசிய கோப்புகளில் உள்ள விபரங்களை வெளியிடலாமா? என்பது குறித்து முடிவு செய்ய மத்திய அமைச்சரவை செயலாளர் அஜித் சேத்தி தலைமையில் மத்திய அமைச்சரவை அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.


 

 
சுதந்திர போராட்டத்தின்போது, 1939 ஆம் ஆண்டு காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரசில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விலகினார். பின்னர் அவர் ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளுக்குச் சென்று இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவில் வெள்ளையர்களுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடினார்.
 
1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18 ஆம் தேதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டதாக கூறப்பட்டது. எனினும், அதை நேதாஜியின் குடும்பத்தினரோ, அவருடைய ஆதரவாளர்களோ ஏற்கவில்லை. எனவே நேதாஜி இறந்தாரா, உயிரோடு இருக்கிறாரா? என்ற சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகின்றது. 
 
இந்நிலையில், மத்திய அரசால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாக்கப்பட்டு வரும் நேதாஜியைப் பற்றிய 90 க்கும் மேற்பட்ட ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிடவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதே கோரிக்கையை பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
 
இந்த ரகசிய கோப்புகளை வெளியிட்டால், மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், நமது நட்பு நாடுகள் சிலவற்றுடன் உறவுகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால்தான் அந்த கோப்புகள் பகிரங்கமாக வெளியிடப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
தற்போது ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு தலைநகர் பெர்லினில் உள்ள இந்திய தலைமை தூதரகம் விருந்து அளித்தது. அங்குள்ள முக்கிய இந்திய பிரமுகர்கள் சிலரும் பங்கேற்றனர். அந்த வகையில்,..
மேலும் அடுத்தப்பக்கம்...

 இங்குள்ள ஹம்பர்க் நகரில் இயங்கிவரும் இந்திய-ஜெர்மனி சங்கத்தின் தலைவரும் நேதாஜியின் பேரனுமான சூர்ய குமார் போஸ் இந்த விருந்தில் கலந்து கொண்டார்.


 

 
இந்த விருந்துக்குப் பின்னர் நரேந்திர மோடியை தனியே சந்தித்த சூர்ய குமார் போஸ், நேதாஜியின் மறைவு குறித்து இந்திய அரசிடம் உள்ள ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிடும்படி கோரிக்கை விடுத்தார். அதுமட்டுமின்றி, நேரு பிரதமராக இருந்த காலத்தில் நேதாஜியின் குடும்பத்தார் உளவு பார்க்கப்பட்டதாக சமீபத்தில் வெளியான தகவல்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மையை உலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
 
இந்த கோரிக்கைக்குப் பதில் அளித்த மோடி, தானும் அவ்வாறே விரும்புவதாகவும் இது தொடர்பாக கவனிப்பதாகவும் கூறியதாக இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூர்ய குமார் போஸ் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், நேதாஜி தொடர்பான ரகசிய கோப்புகளில் உள்ள விபரங்களை வெளியிடலாமா? என்பது தொடர்பாக முடிவு செய்ய அமைச்சரவை செயலாளர் அஜித் சேத் தலைமையில் மத்திய அமைச்சரவை அதிகாரிகள் கொண்ட குழு இன்று நியமிக்கப்பட்டுள்ளது.
 
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பில் உள்ள நேதாஜி தொடர்பான 27 ரகசிய கோப்புகள் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் பாதுகாப்பில் உள்ள இதர ரகசிய கோப்புகளையும் வெளியிடுவதால் பிறநாடுகளுடனான இந்தியாவின் உறவுமுறைகள் பாதிக்கப்படுமா? என்பது குறித்து இந்த குழு ஆய்வு செய்து, மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 
 
வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சகங்களின் உயரதிகாரிகள், இந்திய உளவுத்துறையான ‘ரா’ உள்ளிட்ட துறைகளின் உயரதிகாரிகள், இது குறித்து நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதா தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.