1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (22:00 IST)

’நாங்கள் சீனாவை நாடுவோம்’ - இந்தியாவிற்கு நேபாளம் பதிலடி

நேபாளத்திற்கு சரக்கு லாரிகளை அனுப்ப, இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சீனா உதவியை நேபாளம் நாடும் என்று இந்தியாவிற்கான நேபாள துாதர் தீப் குமார் உபாத்யாய் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் கூறுகையில், “மதேசி தரு மக்களின் கோரிக்கையை ஏற்று, புதிய அரசியல் சாசன சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி தலைமையிலான அரசு வலியுறுத்துகிறது. இதற்கு, இந்தியா அவகாசம் தரவேண்டும்.
 
ஆனால், பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை நேபாளத்திற்கு அனுப்பாமல், சரக்கு லாரிகளை எல்லையில் நிறுத்தி வைத்துள்ளது. லாரி ஓட்டுனர்கள் மதேசி போராட்டத்திற்கு அஞ்சி நேபாளத்திற்கு செல்ல மறுப்பதாக இந்தியா கூறுகிறது.
 
ஆனால், 'அனைத்து வாகனங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்' என நேபாள அரசு இந்தியாவிடம் உறுதி அளித்துள்ளது. அதன் பிறகும், லாரிகள் வராததால், நேபாளத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 
எனவே, நேபாளத்திற்கு சரக்கு லாரிகளை அனுப்ப, இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, தசரா, தீபாவளி பண்டிகைகள் வருவதால், இப்பிரச்னைக்கு, மத்திய அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்.
 
இல்லாவிடில், போக்குவரத்து சிரமங்களைக் கூட பொருட்படுத்தாமல், சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் உதவியை, நேபாளம் நாடுவதை தவிர வேறு வழியில்லை. அந்த நிலைக்கு நேபாளத்தை தள்ள வேண்டாம்” என்று கூறியுள்ளார்.