வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: ஞாயிறு, 21 ஜூன் 2015 (14:38 IST)

35 நிமிடங்களில் 15 யோகாசனங்களை செய்தார் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி 35 நிமிடங்கள் வரை ராஜபாதையில் தரை விரிப்பில் அமர்ந்தும் படுத்துக் கொண்டும்  15 வகையான யோகாசனங்களை செய்தார்.
 
கடந்த ஆண்டு நரேந்திர மோடி ஐ.நா. சபையில் பேசுகையில் இந்தியாவின் பாரம்பரிய மிக்க யோகா கலையின் பெருமைகளை எடுத்துக்கூறியதுடன் சர்வதேச யோகாதினம் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
 
இதை ஏற்றுக் கொண்ட ஐ.நா சபை ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இதற்கான தீர்மானமும் ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்டது.
 
இதையடுத்து இன்று உலகம் முழுவதும் 192 நாடுகளில் யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
 
டெல்லியில் ராஜபாதையில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் உலக யோகா தினம் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக ராஜபாதையில் கடந்த சில நாட்களாக ஒத்திகை நடந்து வந்தது.
 
இந்நிலையில், காலை 7 மணிக்கு அங்கு யோகா பயிற்சி தொடங்கியது. ராஜபாதையில் யோகா பயிற்சியில் ஈடுபடுவதற்காக தன்னார்வ தொண்டர்கள், தேசிய மாணவர் படையினர், மாணவ–மாணவிகள், யோகா பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கில் திரண்டு இருந்தனர்.
 
ராஜபாதையில் யோகா கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த நரேந்திர மோடி குழந்தைகள், சிறுவர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு நடந்து சென்றார். அவர்களிடம் யோகா பற்றி பேசிக் கொண்டே சென்றார் பின்னர் யோகா பயிற்சியில் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவர்  35 நிமிடங்களில் 15 ஆசனங்களைச் செய்தார்.
 
இந்த யோகா பயிற்சியில் 40,000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலக சாதனையாகும். இதற்கு முன் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் விவேகானந்தா கேந்திரா சார்பில் நடந்த யோகா பயிற்சியில் 29,973 பேர் கலந்து கொண்டனர். இதுதான் உலக சாதனையாக இருந்தது. இன்று அந்த சாதனை முறியடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.