1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 23 மே 2015 (12:35 IST)

நரேந்திர மோடியால் வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பு அதிகரிப்பு - ராம்விலாஸ் பஸ்வான்

பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையால், வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கருத்து தெரிவித்துள்ளார்.
 
தஞ்சாவூரில் மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொதுவினியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
மத்திய உணவு தானிய சேமிப்பு கிடங்குகளில் சேதவிகிதம் முன்பு 2 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது. இதை குறைக்க, இந்திய உணவுக்கழகம் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்தியது.
 
இதனால், அது 0.04 சதவீதமாக குறைந்துள்ளது. உணவு தானியங்களை கொள்முதல் செய்வது மட்டுமல்லாமல் பொது வினியோகத் திட்டத்தின் மூலம் சமச்சீரான வினியோகம் செய்ய வேண்டும்.
 
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1989 ஐ முழு வீச்சில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக டெல்லியில் வரும் மே 29ஆம் தேதி தேசிய நுகர்வோர் மன்றம், மாநில நுகர்வோர் ஆணையங்களின் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
 
தற்போது, நாட்டில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முன்பு, நாட்டில் அதிக அளவில் இருந்த ஊழல் தற்போது இல்லை என்ற நிலையை அடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அதிரடி நடவடிக்கையால் வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்துள்ளது.
 
நீதிமன்ற வழக்கில் இருந்து, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனால், முதலமைச்சராக அவர் பதவி ஏற்க சட்டரீதியாக எந்த தடையும் இல்லை. அவர் முதலமைச்சராக பதவியேற்க முழு உரிமை உள்ளது என்றார்.