வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 5 மார்ச் 2015 (19:50 IST)

நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை நிறைவேறவிடாமல் எதிர்கட்சிகள் தடுக்கின்றன: மோடி குற்றச்சாட்டு

நிலம் கையகப்படுத்துதல் மசோதா விவசாயிகளுக்கு எதிரானது அல்ல என்று வலியுறுத்தி கூறிய பிரதமர் மோடி, ராஜ்யசபாவில் இந்த மசோதாவை நிறைவேறவிடாமல் எதிர்கட்சிகள் தடுப்பதாக குற்றம் சாட்டினார்.
 
மத்திய பிரதேச மாநிலம் காந்தவாவில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அனல் மின் நிலைய அலகுகளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த திட்டத்தின் இரண்டாவது திட்டமாக பிரதமர் மோடி 660 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய இருஅனல் மின் நிலைய அலகுகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார். பின்னர் இவ்விழாவில் மோடி பேசியதாவது:-
 
“ மின்சாரம் நமது இல்லங்களை மட்டுமன்றி, நம்முடைய எதிர்காலத்தையும் பிரகாசமாக்குகிறது. மின்சாரம் இன்றி நமது எதிர்கால கனவுகளை நனவாக்க முடியாது. நாட்டில் இன்னும் ஏராளமானோர் மின்சார வசதி இன்றி உள்ளனர். சுமார் 20 சதவீத மக்களுக்கு இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை. அடுத்த தலைமுறையின் பிரகாசமான எதிர்காலத்துக்காக மின்சாரத்தை சேமிக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
 
முந்தைய அரசால் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் மசோதா, பள்ளிகளுக்கு நிலம் வழங்குதல், மருத்துவமனைகள், வீடுகள், நீர் மற்றும் பாசன வசதிகள் போன்றவற்றிற்கு நிலம் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யவில்லை. இந்த வசதிகள் எல்லாம் உங்களுக்கு வேண்டுமா இல்லையா என்று நான் உங்களிடம் கேட்கிறேன். நான் விவசாயிகளுக்கு எதிரானவன் அல்ல. ஒருபோதும் நாங்கள் விவசாயிகளை எதிர்க்க மாட்டோம். இந்த மசோதாவில் எதை மேம்படுத்த வேண்டும் என்று நான்  பிற கட்சிகளிடம் கேட்டேன். ஆனால், அவர்கள் எதையுமே சொல்லவில்லை.
 
முந்தைய அரசு, மருத்துவமனைகள், சாலைகள் பள்ளிகள் மற்றும் வீடுகளுக்கு நிலம் வழங்க மறுத்தது. விவசாயிகள் நீர் மற்றும் பாசன நிலங்களை பெறுவதற்கு வழிவகை செய்யாமல் முந்தைய அரசு மசோதாவை சட்டமாக்கியது  என்று குற்றம் சாட்டினார். மேலும், மத்திய பட்ஜெட்டை பாராட்டி பேசிய அவர், “ ஏழைகள், பழங்குடியின சமுதாயத்தினர், தலித் சகோதர சகோதரிகள் நலனுக்காக பல நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம் என்றார்.