செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Modified: வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (19:43 IST)

சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஐஐடி மூலம் புதுமையான தீர்வு - பிரதமர்

மக்கள் தினசரி வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குப் புதுமையான தீர்வுகளை அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி ஐஐடி நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டார். 2014 ஆகஸ்டு 22 அன்று தில்லியில் நடந்த மாநாட்டில் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
 
"அறிவியல் உலகளாவியது! ஆனால், தொழில்நுட்பம் நமக்கேற்றாற் போல் இருக்க வேண்டும்" என்று பிரதமர் கூறினார். ஐஐடி-கள் மாணவர்களுக்குப் பாடப் பணிகள் அளிக்கும்போது நமக்குத் தேவையானவற்றை மனத்தில் கொண்டு அளிக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் படிக்கும்போது, புதுமையான தீர்வுகளைக் கண்டுபிடிப்பர். இது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்று கூறினார்.
 
பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் பெரும்பாலும் இறக்குமதியை நம்பி உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிய பிரதமர் இந்நிலை மாற வேண்டும் என்றார். ரூபாய் நோட்டுகளின் மை, கண்ணீர் எரிவாயு உட்பட பல முக்கிய பொருட்கள் இறக்குமதியை நம்பியே உள்ளது. இவற்றை உருவாக்கும் திறமை இந்தியாவில் இல்லை என்பதை நான் நம்ப மறுக்கிறேன், என்று பிரதமர் தெரிவித்தார்.
 
அனைவருக்கு வீடு என்ற கனவை நினைவாக்க ஐஐடி-கள் பங்களிக்க வேண்டும். சுற்றுச் சூழலைப் பாதிக்காத, குறைந்த செலவில் வலிமையான வீடுகளைக் கட்டத் தொழில்நுட்பம் கொண்டுவர ஐஐடிகள் உதவ வேண்டும் என்று கூறினார்.
 
அதோடு, ஐஐடி-கள் தங்கள் அருகில் உள்ள பொறியியல் கல்லூரிகளைத் தத்தெடுத்து அவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என்று கூறினார். அது வளர்ச்சிக்கு ஒரு தூண்டுதலாக அமையும் என்றார்.
 
ஐ.ஐ.டி-யர்களை மாபெரும் சக்தி என்று விவரித்த பிரதமர் ஐஐடிகள் தங்கள் முன்னாள் மாணவர்கள் தற்போதுள்ள மாணவர்களுடன் கலந்துதுறையாடும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதன்மூலம் பல்வேறு துறைகளில் அவர் அவருக்கு உள்ள அணுபவங்களை பரிமாறிக்கொள்ள முடியும்.
 
உலகத் தரவரிசை முக்கியம், அதேபோல் தரவரிசைக்காக நமக்கு நாமே சொந்த மதிப்புகளை அமைக்க வேண்டும். அது மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் நமக்கு நாமே உருவாக்கிச் செயல்முறையாக உதவி புரியும். 
 
இவ்வாறு பிரதமர் மோடி, விழாவில் பேசினார்.