1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: வியாழன், 17 செப்டம்பர் 2015 (08:57 IST)

நேபாள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த தூதரை திரும்ப பெற்றது சவுதி

நேபாள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த தூதரக அதிகாரியை சவுதி அரசு திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது.
 
டெல்லியில் சவுதி அரேபிய தூதரக அதிகாரியாக  செயல்பட்டவர் ஜீட் முகமது ஹூசைன். இவரது வீட்டில் பணிபுரிந்த இரண்டு நேபாள பெண்களை தூதரக அதிகாரியும், அவரது வீட்டிற்கு வந்த விருந்தினர்களும் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.
 
தூதரக அதிகாரி தங்களை கடுமையாக தாக்கியதாகவும், வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்த இரண்டு நேபாள பெண்களும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
இதனைத் தொடர்ந்து  நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் அந்த இரண்டு பெண்களும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டனர் என்பது தெரியவந்தது.


 
 
இதனைத் தொடர்ந்து பாதிக்ப்பட்ட பெண்கள் அளித்த புகாரினைத் தொடர்ந்து தூதரக அதிகாரி  ஜீட் முகமது ஹூசைன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே தங்களது தூதரக அதிகாரியை விசாரிக்க கூடாது என்றும், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு நிருபிக்கப்படவில்லை என்றும் சவுதி அரசு தெரிவித்தது.
 
இந்நிலையில் இவ்விவகாரத்தில் புதிய திருப்பமாக  தூதரக அதிகாரியான ஜீட் முகமது ஹூசைனை சவுதி அரசு திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது.
 
இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,  “நேபாள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தாக குற்றம் சாட்டப்பட்ட சவுதி தூதரக அதிகாரி ஜீட் ஹாசன் இந்தியாவை விட்டு சென்றுவிட்டார் என தெரியவந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.