வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 25 ஜூலை 2014 (15:37 IST)

19 குழந்தைகளை கொன்று சமைத்து சாப்பிட்டவரின் தண்டனை குறைப்பு மனு தள்ளுபடி

நொய்டாவை அடுத்த நிதாரி கிராமத்தை சேர்ந்த 19 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த சுரேந்திரகோலியின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்துள்ள நிலையில் அவர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றமும் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
 
டெல்லி அருகே உள்ள நொய்டாவை ஒட்டிய நிதாரி கிராமத்தை சேர்ந்த பல குழந்தைகள் கடந்த 2005 ஆம் ஆண்டு காணாமல் போனார்கள். இந்நிலையில் நொய்டாவில் வசிக்கும் தொழிலதிபர் மணிந்தர் சிங் பாந்தர் என்பவர் வீட்டருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டு எடுக்கப்பட்டன. இதை தொடர்ந்து தொழிலதிபர் வீட்டில் சமையல் வேலை பார்த்து வந்த சுரேந்திர கோலி என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். 
 
இதில் குழந்தைகளை கடத்தி அவர்களது கழுத்தை நெறித்து கொலை செய்து பின்னர் அவர்களை வெட்டி சமையல் செய்து சாப்பிட்டது தெரியவந்தது. சில குழந்தைகளை தொழில் அதிபருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கோலி ஒப்புக் கொண்டார். இதை தொடர்ந்து சுரேந்திர கோலி மற்றும் பாந்தர் மீது மொத்தம் 19 கொலை வழக்குகள் போடப்பட்டன. 
 
இதில் சுரேந்திர கோலி மீது 3 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு கடந்த 2009 ஆம் ஆண்டு காசியாபாத் சிபிஐ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. டெல்லி நீதிமன்றமும் இதனை உறுதி செய்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோலிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அவர் அப்பீல் செய்யவில்லை. ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி வைத்தார். அதனை கடந்த 20 ஆம் தேதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.
 
இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி கோலி தரப்பில் புதிய சீராய்வு மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் எச்.எல்.தத்து மற்றும் அனில் ஆர்.தாவே அடங்கிய பெஞ்ச் இந்த சீராய்வு மனுவை தங்கள் சேம்பரில் விசாரித்தனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி 1153 நாட்களுக்கு பின்னர் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதுதவிர கோலிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனவும் கருத்து தெரிவித்து அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.