1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2016 (16:17 IST)

மும்பைத் தாக்குதலுக்கு யார் காரணம்?: தீவிரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம்

மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பும், பாகிஸ்தானின் உளவுத்துறையுமே காரணம் என்று இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டேவிட் ஹெட்லி அமெரிக்காவிலிருந்து வாக்குமூலம் அளித்துள்ளார்.


 

 
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த சாஜித் மீர் என்பவர் மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடரபான திட்டத்திற்கு தன்னுடன் உதவியாக இருந்தார் என்று காணொளி மூலம் அமெரிக்காவிலிருந்து டேவிட் ஹெட்லி மும்பை நீதிபதியிடம் சாட்சியம் அளித்தார்.
 
சாஜித் மீரின் ஆலோசனையின் பேரில், தாவூத் கிலானி எனும் தனது பெயரை டேவிட் ஹெட்லி என்று மாற்றி அந்த பேரில் அமெரிக்க விசாவைப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
இந்தியாவுக்குச் சென்று, மும்பையில் ஒரு அலுவலகத்தைத் தொடங்கி, அந்த நகர் குறித்த காணொளி ஒன்றை தயாரிக்குமாறு சாஜித் மீர் தன்னிடம் தெரிவித்தார் எனவும் அந்த சாட்சியத்தில் டேவிட் ஹெட்லி கூறியுள்ளார்.
 
அதன்படி, இந்தியாவிற்குத் தான் 8 முறை வந்து அதில் 7 முறை மும்பை நகருக்குச் சென்றதாகவும் அவர் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவிற்கு வருவதற்கான விசா விண்ணப்பத்தில் போலித் தகவல்களை அளித்ததையும் அவர் அப்போது ஒப்புக்கொண்டார்.


 

 
மேலும், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நோக்கம் இந்திய இராணுவத்தை எதிர்த்து போராடுவதும், காஷ்மீர் மக்களுக்கு உதவுவதுமே என்று அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
 
அந்த தீவிரவாத அமைப்பில், தான் 2002 ஆம் ஆண்டு உறுப்பினராக சேர்ந்து, பயிற்சிகளைப் பெற்றதாகவும், இதில் ஐஎஸ்ஐ அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் டேவிட் ஹெட்லி தனது சாட்சியத்தின் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.