வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 4 மார்ச் 2015 (11:15 IST)

மத்திய அரசின் பாதுகாப்பு முல்லைப்பெரியாறு அணைக்குத் தேவையில்லை: உம்மன் சாண்டி

முல்லைப்பெரியாறு அணைக்கு முழுமையான அளவில் பாதுகாப்பை கேரள காவல்துறையினரால் வழங்க முடியும், எனவே அங்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை பாதுகாப்பிற்காக நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்று கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.

கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி டெல்லி சென்றார். அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
 
பின்னர் டெல்லியில் உள்ள கேரளா இல்லத்திற்கு உம்மன் சாண்டி வந்தார்.
 
அங்கு செய்தியாளர்களிடம் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணைக்கு மத்திய அரசின் பாதுகாப்பு தேவையில்லை என்று கூறினார்.
 
மேலும், முல்லைப்பெரியாறு அணை கேரள எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. அதனால் அந்த அணையை பாதுகாப்பது கேரள அரசாங்கத்தின் கடமை.
 
அந்த அணைக்கு முழுமையான அளவில் பாதுகாப்பை கேரள காவல்துறையினரால் வழங்க முடியும். எனவே அங்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை பாதுகாப்பிற்காக நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.