1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 19 டிசம்பர் 2014 (22:06 IST)

சிறையிலுள்ள 3ஆயிரத்திற்கும் அதிகமான தாலிபான் தீவிரவாதிகளுக்கு தூக்கு - பாகிஸ்தான் ராணுவத் தளபதி கோரிக்கை

சிறையிலுள்ள 3ஆயிரத்திற்கும் அதிகமான தாலிபான் தீவிரவாதிகளுக்கு தூக்கிலிட வேண்டும் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி ரஹீல் ஷெரீஃப் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
கடந்த செவ்வாய்கிழமை அன்று பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளியில், தலிபான் தீவிரவாதிகள் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் 133 குழந்தைகள் உட்பட 151 பேர் பலியானார்கள். குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா பொதுச்செயலாளர் கோபி அன்னான் உட்பட, உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
 
இதைத் தொடர்ந்து, பெஷாவர் நகரில் பாகிஸ் தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த புதன்கிழமை அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். தலிபான் உட்பட பல்வேறு தீவிரவாத இயக்கங்களை பூண்டோடு ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், மும்பை வெடிகுண்டு தாக்குதல் உட்பட பல்வேறு தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஸ்கர் இ தொய்பாவின் கமாண்டர் ஜாகியுர் ரெஹ்மான் லக்விக்கு நேற்று ராவல்பிண்டி நகர தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. லக்வியின் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்யப் போவதாக பாகிஸ்தான் அரசு செய்தி வெளியிட்டுள்ளது.
 
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீஃப் தனது வலைதளப் பக்கத்தில், ”பிரதமர் நவாஸ் ஷெரிஃப் தீவிரவாதிகளை தூக்கிலிட வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகளை அடுத்த 48 மணி நேரத்திற்குள் தூக்கிலிட வேண்டும்.
 
பாகிஸ்தான் ராணுவம் தாலிபான்களை அழிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் குழந்தைகளையும், பெண்களையும் குறிவைக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.