வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 29 நவம்பர் 2014 (13:38 IST)

யானைத் தந்தங்கள் வைத்திருந்ததால், நடிகர் மோகன்லாலுக்கு பத்ம பூஷன் வழங்க எதிர்ப்பு

வீட்டில் யானைத் தந்தங்கள் வைத்திருந்ததல், மலையாள நடிகர் மோகன்லாலுக்கு பத்ம பூஷன் வழங்க விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
 
மோகன் லாலுக்கு பத்மபூஷன் விருது வழங்க கேரள அரசு சிபாரிசு செய்துள்ளது. யானைத் தந்தங்களைப் பதுக்கியவருக்கு பத்மபூஷன் விருது வழங்குவது ஏற்புடையது அல்ல என்று விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
 
விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் பி.கே.வெங்கடாசலம் கூறும்போது, 'மோகன்லால் தனது வீட்டில் 13 ஜோடி யானைத் தந்தங்களைப் பதுக்கி வைத்திருந்தார். யானைத் தந்தங்கள் வைத்துக் கொள்வதற்கு வனத்துறையிடம் இருந்து முறையான அனுமதியை அவர் வாங்கவில்லை.
 
இந்த வழக்கில் மோகன்லால் முக்கிய குற்றவாளியாக இருக்கிறார். நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அவருக்கு உயரிய பத்மபூஷன் விருதை கொடுக்கக் கூடாது' என்றார்.
 
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யானைத் தந்தங்களை சட்ட விரோதமாகப் பதுக்கி வைத்ததாக நடிகர் மோகன்லால் மீது கேரள வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அப்போது, அவருடைய வீட்டில் சோதனை நடத்தியதில் 13 ஜோடி யானைத் தந்தங்களைக் கைப்பற்றினார்கள்.
 
ஆனால் இது பற்றி பேட்டியளித்திருந்த மோகன்லால், 'யானைத் தந்தங்கள் கடந்த 26 வருடங்களாக எனது வீட்டில் உள்ளன. இது குறித்துப் பத்திரிக்கைகளில் பல கட்டுரைகள் வந்துள்ளன. இதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளன. இது சட்ட விரோதமானது அல்ல' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.