வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 26 மே 2015 (18:23 IST)

கருப்புப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மோடி மீட்கவில்லை - சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

வெளிநாடுகளில் பதுக்கு வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தில் ஒரு ரூபாய் கூட இந்தியாவிற்கு திரும்பவில்லை என்று சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டியுள்ளார்.
 
தருமபுரியில், மாவட்ட அளவிலான மக்கள் கோரிக்கை மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது. மாநாட்டில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டு உரையாற்றினார்.
 
அப்போது பேசிய அவர், “மோடி தலைமையிலான மத்திய அரசு தனது ஓராண்டு நிறைவு கொண்டாட்டத்தை உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் கொண்டாடியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் பற்றி எதுவுமே பேசப்படவில்லை.
 
அடித்தட்டு மக்களுக்கான பிரச்சினைகள் குறித்தும் எந்த அக்கறையும் காட்டவில்லை. கருப்பு பணத்தை மீட்பது குறித்து தேர்தல் நேர வாக்குறுதி இன்றுவரை அப்படியே உள்ளது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலுக்கு பிறகும் ஒரு ரூபாய் கூட நாடு திரும்பவில்லை.
 
இதையெல்லாம் செய்வதற்கு பதிலாக பிரதமர் ஒரே ஆண்டில் 18 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மட்டும் மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 2.4 கோடி இளைஞர்கள் பொறியியல் படிப்பை முடிக்கின்றனர்.
 
ஆனால் 12 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு தேடாமல், யாருக்கோ லாபம் தரும் நிலம் கையகப்படுத்தும் மசோதா போன்றவற்றில் மட்டுமே மோடி அரசு அக்கறை காட்டுகிறது.
 
அசுவமேத யாகத்தில் வெள்ளைக்குதிரையை லவ-குசா இருவரும் அடக்கினர். அதுபோன்று கட்டுப்பாடற்று இயங்கும் மத்திய அரசை மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் அடக்கப் போகிறது” என்றார்.