1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 2 ஜூலை 2015 (05:24 IST)

டார்ஜிலிங்கில் கனமழையால் 25 இடங்களில் நிலச்சரிவு: 38 பேர் பலி

மேற்கு வங்க மாநிலத்தில் கடும் மழை காரணமாக டார்ஜிலிங் மாவட்டத்தில் 25 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 38 பேர் பலியானார்கள்.
 

 
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலத்தில் டார்ஜிலிங், கலிம்போங் மற்றும் குர்சியாங் ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
 
டார்ஜிலிங் - சிக்கிம் பகுதியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை என்.எச்.10 மற்றும் சிலிகுரி - மட்டிகரா ஆகிய இடங்களை டார்ஜிலிங்குடன் இணைக்கும் என்.எச் 55 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் கடும் சேதமடைந்தன. இந்தப் பகுதிகளில் பல இடங்களில் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
 
குறிப்பாக, டார்ஜிலிங், கலிம்போங் மற்றும் குர்சியாங் பகுதிகளில் 25 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். கலிம்போங் பகுதியில் 15 பேரை காணவில்லை. மீட்புக்குழுவினர் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
மேலும், டார்ஜிலிங் பகுதியில் 17 பேர், கலிம்போங் பகுதியில் 11 பேர் என 38 பேர் வரை உயிரிழந்திருப்பதாகப் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
ராணுவத்தினரின் உதவியுடன் மீட்புக்குழுவினர் நிவாரணப்பணிகளில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கு வங்க அரசு செய்யும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 
அதே போல, மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.