வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 26 ஜூலை 2015 (12:06 IST)

தில்லியில் ஒரு துரதிர்ஷ்டம் பிடித்த பங்களா

தலைநகர் தில்லியின் முக்கியப் பகுதியான சிவில் லைன் பகுதியில் துரதிர்ஷ்டம் பிடித்த பங்களாவாகக் கருதப்பட்டு, பத்தாண்டுகளுக்கு மேலாக காலியாக கிடந்த ஒரு பங்களாவில் தற்போது மாநில அரசின் கொள்கைகளை வகிக்க உதவும் ஒரு பிரிவு குடியேறியுள்ளது.

சிவில் லைன் பகுதியில் உள்ள ஷாம் நாத் மார்கில் இருக்கிறது இந்த பங்களா. இரண்டு மாடிகளுடன் மூன்று படுக்கையறைகள், ஒரு வரவேற்பறை, சாப்பாட்டு அறை, கூட்ட அறை, பாதுகாவலருக்கான அறை, பணியாளர்களுக்கான தங்குமிடம் என சுமார் 5,500 சதுர மீட்டர் பரப்பில் அமைந்திருக்கிறது இந்தக் கட்டடம்.

இந்த பங்களாவைச் சுற்றி, ஒரு கால்பந்து ஆட்டத்தை நடத்தும் அளவுக்கு மிகப்பெரிய புல்வெளியும் இருக்கிறது.
 
ஆனால், பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்தக் கட்டடம் ராசியில்லாததாகக் கருதப்படுகிறது. இங்கு வசிப்பவர்களின் பதவி நிலைக்காது, ஏன் ஆயுளேகூட சில சமயம் நீடிக்காது.

சிவில் லைன் எனப்படும் இந்தப் பகுதி, மூத்த அதிகாரிகள் வசிப்பதற்காக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தைப் பொறுத்தவரை, 1920களில் கட்டப்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
 
தில்லி சட்டமன்றத்திலிருந்து வெறும் 100 மீட்டர் தூரத்திலேயே இந்த கட்டடம் இருந்ததால், இந்தியா சுதந்திரமடைந்த பிறகு தில்லி முதலமைச்சர் வசிக்க சிறந்த இடமாகக் கருதப்பட்டது.
 
தில்லியின் முதல் முதலமைச்சரான சௌத்ரி பிரம்ம பிரகாஷ் 1952ல் இந்த வீட்டில் வசித்தார். 1990களில் தில்லி முதலமைச்சராக இருந்த மதன் லால் குரானாவும் இந்த வீட்டில் வசித்தார்.

இருவருமே பதவிக் காலம் முடிவதற்கு முன்பாகவே தங்கள் பதவியை இழந்தனர். இதையடுத்து அந்த வீடு துரதிர்ஷ்டமானதாகக் கருதப்பட்டது.
 
"குரானா பதவியை இழந்த பிறகு, யாரும் இந்த வீட்டுக்கு வரவிரும்பவில்லை. சாஹிப் சிங் வர்மா, ஷீலா தீட்சித் ஆகியோர் இதில் வசிக்க மறுத்துவிட்டனர்" என்கிறார் பத்திரிகையாளர் சுஜய் மெஹ்தூதியா.
 
2003ஆம் ஆண்டில், பலரது ஆலோசனைகளையும் மீறி தில்லியில் அமைச்சராக இருந்த தீப் சந்த் பந்து இந்த வீட்டில் குடிபுகுந்தார்.

"தனக்கு மூடநம்பிக்கையெல்லாம் கிடையாது என்று கூறிவிட்டு இந்த வீட்டில் அவர் குடியேறினார். ஆனால், விரைவிலேயே அவருக்கு உடல் நலமின்றிப் போனது. மருத்துவமனையில் உயிரிழந்தார்" என்கிறார் மெஹ்தூதியா.
 
இந்த சம்பவத்திற்குப் பிறகு, இந்த வீடு சபிக்கப்பட்ட வீடு என்ற நம்பிக்கை மேலும் உறுதியானது. அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இந்த வீடு காலியாகவே கிடந்தது. அமைச்சர்கள், அதிகாரிகள் யாரும் இங்கே குடிவர விரும்பவில்லை.
 
2013ஆம் ஆண்டில் அதிகாரியான ஷக்தி சின்ஹா இங்கே தங்கினார். இங்கே வசித்தது நன்றாக இருந்ததாக அவர் கூறினாலும், அவரும் தன் பதவிக் காலத்தை முழுமையாக நிறைவுசெய்யவில்லை.
 
இந்த ராசியில்லாத வீட்டிற்கு தற்போது புதிதாக ஒருவர் குடியேறியுள்ளார். தில்லி அரசுக்கு கொள்கை ரீதியான வழிகாட்டுதல்களை அளிப்பதற்கு தில்லி மாநில அரசு தில்லி டயலாக் ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறது அந்த அமைப்பின் அலுவலகம் இங்கே செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

இந்த ஆணையத்தின் துணைத் தலைவரான ஆஷிஷ் கேதன், இந்த வீடு பற்றிய கதைகளை ஏற்கவில்லை.
 
"இவ்வளவு பெரிய வீடு துரர்திஷ்டம் பிடித்தது என்று கருதப்படுவதால், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என யாரும் இங்கே வரவிரும்பிவில்லை. செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்த காலகட்டத்தில், இந்தக் கதையை முறியடிக்க வேண்டுமென முடிவுசெய்தேன்" என பிபிசியிடம் தெரிவித்தார் கேதன்.
 
இந்த ஆணையத்திற்காக, இந்த வீடு இப்போது புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

கேதன் இங்கே குடிவந்த பிறகு, பேய் எதையாவது பார்த்தாரா என்று கேட்டோம்.
 
"இல்லை. அப்படி ஒரு பேயைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். இங்கே ஆள் பற்றாக்குறையாக இருக்கிறது. பேய் ஏதாவது கிடைத்தால் அதை இங்கே வேலை பார்க்கச் சொல்வேன்" என்கிறார் கேதன்.