1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 1 செப்டம்பர் 2014 (09:42 IST)

சிறுபான்மையினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பாஜக எம்.பி.ஆதித்ய நாத்க்குக் கண்டனம்

சிறுபான்மையினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை பாஜக எம்.பி. யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளதாக, காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஆதித்ய நாத் கூறுகையில், “10 முதல் 20 சதவீதம் வரை சிறுபான்மையினர் வசிக்கும் இடங்களில் ஆங்காங்கே வகுப்புக் கலவரங்கள் இடம்பெறுகின்றன.

20 முதல் 35 சதவீதம் பேர் வசிக்கும் பகுதியில் அந்தக் கலவரம் கடுமையாகவும், அதுவே 35 சதவீதம் பேரை தாண்டினால் அந்த இடங்களில் முஸ்லிம் அல்லாதோருக்கு இடமில்லை என்ற நிலை உருவாகிறது.

ஹிந்துகள் மீது சிறுபான்மையினர் தாக்குதலில் ஈடுபட்டாலோ அல்லது கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டாலோ, அதே விதத்தில் ஹிந்துகள் பதிலடி கொடுப்பார்கள்“ என்று ஆதித்யநாத் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரஷீத் ஆல்வி கூறுகையில், "இது துரதிருஷ்ட வசமானதும், கண்டனத்துக்கு உரியதுமாகும்.

எப்போதும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களையே ஆதித்ய நாத் கூறி வருகிறார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைப் பற்றி இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பது ஏற்க முடியாதது“ என்றார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான சல்மான் குர்ஷித் கூறுகையில், "இது பாஜகவின் குறுகிய மனப்பான்மையைக் காட்டுகிறது. எனினும், இந்தியாவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், ஹிந்துகள், சீக்கியர்கள், ஜைனர்கள் என யாரானாலும் உணர்ச்சிப் பூர்வமானவர்கள், எதிர்காலம் குறித்து சிந்திக்கக் கூடியவர்கள். அவர்கள் பாஜகவின் வலையில் விழ மாட்டார்கள்“ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறுகையில், "ஆதித்யநாத்தின் கருத்து அபத்தமானது. இது முஸ்லிம்கள் மீது பாஜக கொண்டுள்ள வெறுப்புணர்வையே காட்டுகிறது“ என்று கூறியுள்ளார்.