வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 1 ஜூலை 2019 (10:32 IST)

செந்தில் பாலாஜி தூக்கில் தொங்க தயாரா? அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி

அரவக்குறிச்சியின் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கும், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கருக்கும் இடையே சண்டை முற்றி வருகிறது.

“நான் சட்டமன்ற உறுப்பினரானால் விஜய பாஸ்கர் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். அவர் பதவி விலக தயாரா? என கேட்டுசொல்லுங்கள்” என்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். அதிமுகவில் இருந்த காலத்திலிருந்தே செந்தில் பாலாஜிக்கும், விஜய பாஸ்கருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் பல இருந்தன. பிறகு டிடிவி தினகரன் கட்சியை பிரித்த போது அமமுகவில் இணைந்தார்.

அப்போது கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையம் பொது கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர் “அமமுகவில் இணைந்துள்ள செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி சட்ட மன்ற உறுப்பினராக திட்டம் போட்டு வருகிறார். அவர் சட்ட மன்ற உறுப்பினர் ஆனால் நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என பேசினார். அதனால்தான் செந்தில் பாலாஜி இப்படி கேட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று கரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளை பார்வையிட வந்த விஜய பாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது “அவர் அமமுகவில் இருந்தபடியே சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றால் நான் பதவியை ராஜினாமா செய்வதாக கூறினேன். அவர்தான் திமுகவுக்கு மறுபடியும் கட்சி மாறி பிறகு வெற்றிபெற்றுள்ளார்” என்றார்.

மேலும் “இவ்வளவு பேசும் செந்தில் பாலாஜிதான் ‘டிடிவி தினகரன் முதலமைச்சர் ஆகாவிட்டால் தூக்கில் தொங்குவேன்’ என கூறினார். எப்போது தூக்கில் தொங்க போகிறார் என கேட்டுசொல்லுங்கள்” என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.