வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (00:01 IST)

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை கைவிடவேண்டும்: ராமதாஸ்

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை கைவிடவேண்டும்: ராமதாஸ்

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த முடிவு ஊரக மாணவர்களை கடுமையாக பாதிக்கும்.
 
கடந்த 2012 ஆம் ஆண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கும், 2013 ஆம் ஆண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு  நடத்தும்  அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
 
ஆனால், இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த இந்திய மருத்துவ கவுன்சிலின் ஆணை செல்லாது என்று கடந்த 2013 ஆம் ஆண்டில் தீர்ப்பு அளித்தது.
 
பொது நுழைவுத் தேர்வுகள் குறித்து முடிவு எடுக்க இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியது.
 
இதனால், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு நுழைவுத்தேர்வு குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கும் வகையில், இந்திய மருத்துவக் குழு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது.
 
இந்தியாவில் அனைத்து மாணவர்களுக்கும் ஏற்றத்தாழ்வு இல்லாத வகையில் ஒரே மாதிரியான பள்ளிக் கல்வி வழங்கப்படும் வரை பொது நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது.
 
தமிழ்நாட்டில் 2007 ஆம் ஆண்டு வரை நுழைவுத் தேர்வுகள் இருந்தவரை, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேரமுடியவில்லை.
 
ஆனால், நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு மருத்துவப் படிப்புக்கான இடங்களில் சுமார் 70% வரை கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
 
எனவே, இந்த நிலையில், அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடை முறைப்படுத்தப்பட்டால் நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது கேள்விக்குறியாகவிடும்.
 
எனவே, மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை உடனே கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.