வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: சனி, 23 மே 2015 (16:40 IST)

மாவோயிஸ்டாக இருப்பது குற்றம் அல்ல: கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மாவோயிஸ்டாக இருப்பது குற்றம் அல்ல, மாவோயிஸ்ட் என்கிற பெயரில் வன்முறையில் இறங்குவதுதான் குற்றம் என்று கேரள உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
 
கேரள மாநிலத்தில், ஷியாம் பாலகிருஷ்ணன் என்பவரை மாவோயிஸ்ட் என்ற சந்தேகத்தின் பேரில் கேரள சிறப்புக் காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை கேரள உயர் நீதிமன்றம் நீதிபதி முகமது முஷ்டாக் விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.
 
அந்த தீர்ப்பில், ''மாவோயிஸ்ட்களின் கொள்கைகள் நமது அரசியலமைப்புடன் ஒத்துப்போவதாக இல்லாவிட்டாலும், மாவோயிஸ்டாக இருப்பது குற்றம் அல்ல. மானுட விருப்பங்கள் குறித்து சிந்திப்பது மனித உரிமை. ஆனால், தனிப்பட்ட ஒரு நபரோ, அமைப்போ வன்முறையில் இறங்கினால், அதை சட்ட அமைப்பு தடுக்கலாம்.
 
ஆனால், மாவோயிஸ்ட் என்ற ஒரே காரணத்துக்காக ஒருவரை கைது செய்ய முடியாது. அவரது நடவடிக்கைகள் சட்ட விரோதமானவை என்று காவல்துறை நிரூபிக்க வேண்டியதுள்ளது" என்று கூறினார்.
 
மேலும், இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட சியாம் பாலகிருஷ்ணனுக்கு கேரள மாநில அரசு 1 லட்ச ரூபாயை 2 மாதங்களில் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பான செலவாக அவருக்கு ரூ.10 ஆயிரத்தையும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.