திமுக கைவிட்டாலும் கைவிடாத ராஜஸ்தான்; மீண்டும் எம்பி ஆகிறார் மன்மோகன்சிங்

Last Modified புதன், 3 ஜூலை 2019 (08:15 IST)
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த பல ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு பெற்று வந்த நிலையில் அவருடைய பதவிக்காலம் கடந்த மாதம் முடிவடைந்தது. மீண்டும் அசாமில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்படும் அளவுக்கு அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை இல்லை என்பதால் தமிழகத்தில் இருந்து ஆதரவுடன் மன்மோகன்சிங்கை எம்பியாக்க பேச்சுவார்த்தை நடந்தது. மன்மோகன்சிங்கை எம்பியாக்கினால் நாங்குனேரியை விட்டுக்கொடுக்க கூட காங்கிரஸ் முன்வந்தது
ஆனால் நேற்று திமுக தரப்பில் இருந்து இரண்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதோடு, மூன்றாவது இடத்தை மதிமுகவுக்கு அளித்துவிட்டதாகவும் திமுக அறிவித்தது. இதனால் காங்கிரஸ் ஏமாற்றம் அடைந்தது. இந்த நிலையில் மதன்லால் சைனி என்ற எம்பியின் மறைவை அடுத்து ராஜஸ்தானில் ஒரு இடம் காலியானது. இந்த இடத்தை மன்மோகன்சிங் அவர்களை வைத்து நிரப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளது
ராஜஸ்தானில் ஆளும் கட்சியாக தற்போது காங்கிரஸ் இருப்பதால் மன்மோகன்சிங் ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்படுவதில் எந்தவித பிரச்சனை இல்லை. இதுகுறித்து ஆலோசிக்க ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹலாட் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தார். இருவரும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் மன்மோகன்சிங் ராஜஸ்தானில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :