1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: சனி, 22 நவம்பர் 2014 (15:59 IST)

மோடி மீது மம்தா கடும் குற்றச்சாட்டு

மோடி பிரதமராக பதவியேற்றது முதலே தனக்கு எதிராக பல வழக்குகளை போடுவதாகவும், மீடியாக்களை வைத்துக்கொண்டு அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபடுவதாகவும் மம்தா குற்றம்சாட்டினார்.
 
மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் சாரதா சிட்பண்ட் நிறுவனம் ரூ.10 ஆயிரம் கோடி அளவிற்கு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மோசடிப் புகாரில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஆளும் திரிணாமுல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் , அதிகாரிகள் உட்பட பலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய பல பிரபலங்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஸ்ரீரின்ஜாய் பட்டர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நேற்று காலை முதல் மாலை வரை விசாரணை நடத்திய சிபிஐ, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி கைது செய்தனர். இந்த விவகாரம் திரிணாமுல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் பிரதமர் மோடி மீது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் நடத்திய நேரு பிறந்த நாள் விழாவில் தான் கலந்து கொண்டதால், எங்கள் கட்சி எம்பி ஸ்ரீரின்ஜாய் கைது செய்யப்பட்டார் என்றும், மோடி பிரதமராக பதவியேற்றது முதலே தனக்கு எதிராக பல வழக்குகளை போடுவதாகவும், மீடியாக்களை வைத்துக்கொண்டு அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபடுவதாகவும் மம்தா குற்றம்சாட்டினார். மேலும் பாஜகவின்  இந்த சவால்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும். பத்திரிக்கையாளர்கள் ஒன்றும் கடவுள் இல்லை. அவர்களால் எங்களை ஒன்றும் செய்து விட முடியாது என்றும் தெரிவித்தார். மேலும பார்ட்வான் குண்டுவெடிப்பு வழக்கு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் மேற்கு வங்க மாநில அரசே உரியமுறையில் அதனை விசாரிக்கும் என்றார்.