1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 31 அக்டோபர் 2014 (16:20 IST)

சர்தார் படேல் இல்லையெனில் மகாத்மா காந்தி முழுமை பெற்றிருக்க மாட்டார் - மோடி பேச்சு

சுவாமி விவேகானந்தா இல்லாமல் போயிருந்தால் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பூர்த்தி அடையாதவர் போல் தெரிந்திருப்பார். அதேபோல்தான் சர்தார் படேல் இல்லையெனில் மகாத்மா காந்தியும் பூர்த்தி அடையாதவர் போல் தெரிந்திருப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
 
சர்தார் படேலின் 139-வது பிறந்த தினமான இன்று டெல்லி ராஜ்பாத்தில் ‘தேச ஒற்றுமை’ ஓட்டத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு கூறியுள்ளார்.
 
இந்த தேச ஒற்றுமை நிகழ்ச்சியில் சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு ஆகிய மத்திய அமைச்சர்களும், கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் மற்றும் குத்துச்சண்டை வீரர் சுஷில் குமார் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களும் பங்கேற்றனர்.
 
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றும் போது, “தாய்நாட்டிற்கு சேவை புரிவது என்ற பயணமே சர்தார் படேலின் வாழ்க்கை, உண்மையில் நவீன இந்தியாவை உருவாக்கியவரே சர்தார் படேல்தான்.
 
படேலின் வாழ்க்கைப் பயணம், தாய்நாட்டிற்கான அர்ப்பணிப்பு மற்றும் ஆழமான தைரியம் ஆகியவற்றால் ஆனது. வரலாற்றை மறக்கும் நாடு வரலாற்றை உருவாக்கி முன்னேற்றம் காண முடியாது. எனவே வேட்கை நிரம்பிய இந்த நாட்டில், கனவுகளை சுமந்து கொண்டிருக்கும் இளைய சமுதாயம் கொண்ட இந்த நாட்டில், வரலாற்றின் ஆளுமைகளை நாம் மறக்கலாகாது. வரலாற்றையும், பாரம்பரிய பெருமைகளையும் நமது கருத்தியல்களுக்கேற்ப பிரித்தல் கூடாது” என்றார்.
 
இந்திரா காந்தியின் நினைவாக, “நாட்டின் சக குடிமகன்கள் மற்றும் பெண்களுடன் இந்திரா காந்தியின் இன்றைய ‘புண்ணிய திதி’யில் நினைவுகூர்கிறேன்” என்றார்.
 
அதன் பிறகு இந்திரா காந்தி படுகொலைக்கு பிறகு நடந்த சீக்கியர்களுக்கு எதிராக வெடித்த வன்முறைகள் பற்றி சூசகமாக அவர் தெரிவிக்கையில், "சர்தார் படேல் எந்த தேசியத் தலைவரின் பிறந்த தினத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் ஒருமைப்பாட்டை குலைக்கும் சம்பவம் நிகழ்ந்தது துரதிர்ஷ்டவசமானது. அந்த நாளில், நம் மக்கள் கொல்லப்பட்டனர். அதுவும் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் இருதயத்தில் ஏற்பட்ட காயம் மட்டுமல்ல, நாட்டின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பெருமை மிக்க பாரம்பரியம் மற்றும் பண்பாட்டின் மீது குத்தப்பட்ட வாள்” என்றார்.
 
சர்தார் படேல் பிறந்த தினமான அக்டோபர் 31 ஆம் தேதி இனி ‘தேசிய ஒருமைப்பாடு தினம்’ என்று அனுசரிக்கப்படவுள்ளது.