1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 31 ஜனவரி 2015 (17:16 IST)

சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் - தட்டுப்பாடு ஏற்படுமா?

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கியாஸ் நிரப்பும் மையங்களுக்கு மொத்த சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
 
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கியாஸ் நிரப்பும் மையங்களுக்கு மொத்த சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் எரிவாயுவை எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
 

 
இந்த டேங்கர் லாரிகளுக்கான வாடகை 3 ஆண்டுக்கு ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வாடகை ஒப்பந்தம் 31-10-14 தேதியுடன் முடிவடைந்தது. எனவே புதிய வாடகை ஒப்பந்தம் செய்ய எண்ணெய் நிறுவனங்கள் கோரி வந்தன.
 
புதிய வாடகை நிர்ணயம் செய்வதில் எண்ணெய் நிறுவனங்களுக்கும், டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்து உள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் தொடங்கியது.
 
இது குறித்து தென்மண்டல சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் நடராஜன் கூறுகையில், “டேங்கர் லாரிகளுக்கான வாடகை கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்தி தரும்படி கோரிக்கை விடுத்தோம். இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் 1 சதவீதம் குறைத்து 9 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று கோரினோம்.
 
ஆனால் இதனை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கவில்லை. தென் மண்டலத்தில் 3200 டேங்கர் லாரிகள் ஓடுகிறது. இன்று அனைத்தும் வேலைநிறுத்தத்தில் குதித்து உள்ளன. எங்கள் கோரிக்கை குறித்து சுமூக தீர்வு ஏற்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும்” என்றார்.