1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 20 ஏப்ரல் 2015 (14:12 IST)

சோனியா காந்தி குறித்து விமர்சனம் - நிலம் கையகப்படுத்துதல் மசோதா விவகாரங்களால் முடங்கியது மக்களவை

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து மத்திய அமைச்சர் விமர்சித்தற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிலம் கையகப்படுத்துதல் மசோதா தொடர்பாகவும் நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை முடக்கப்பட்டது.
 
மக்களவை இன்று காலை கூடியவுடன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சித்த விவகாரம் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா, "சோனியா காந்தியை விமர்சித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதவி விலக வேண்டும். அவரது கருத்து இந்தியப் பெண்களை மட்டும் காயப்படுத்தவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனையும், ஏன் நைஜீரியர்களையும் அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது. இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்விவகாரத்தில் பிரதமர் மவுனியாக இருப்பது ஏன்" என்றார்.
 
அப்போது குறுக்கிட்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, "இத்தகைய கருத்துகள் யார் சொல்லியிருந்தாலும் ஏற்புடையதல்ல" என்றார்.
 
அவரைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், "எல்லாப் பிரச்னைகளிலும் பிரதமரை இழுப்பது சரியல்ல" என்றார்.
 
அதேவேளையில், வெங்கையா நாயுடு அமர்ந்திருந்த பக்கம் நோக்கி, "வெங்கையா அவர்களே, ஆனாலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்புடையதல்ல. கிரிராஜ் சிங் அடுத்தவர்கள் மனம் புண்படும் வகையில் பேசியிருக்கக் கூடாது. அவர் பேச்சு என்னையும் வேதனைப்படுத்தியது" என்றார்.
 
ஆனாலும், கிரிராஜ் சிங் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை 11.45 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அவை மீண்டும் கூடியபோது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வருத்தம் தெரிவித்தார்.
 
சோனியா காந்தி விவகாரத்தை தொடர்ந்து, நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.