1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2015 (17:18 IST)

ஓரினச் சேர்க்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க மத்திய அரசு பரீசிலனை: சதானந்த கவுடா

இயற்கைக்கு மாறாக உறவு கொண்டால் குற்றம் இல்லை என புரட்சிகர சட்டம் கொண்டவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சட்ட அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
 

 
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதற்கு ஏதுவாக இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின் 377வது பிரிவை நீக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார். இதனால் ஓரினச் சேர்க்கை சட்டபூர்வாக அனுமதிக்கப்படும் நிலை ஏற்படும் என்றார் அவர்.
 
அதேபோன்று ஓரினச் சேர்க்கை திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரவும் வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். ஓரின திருமணத்திற்கு அமெரிக்காவில் நாடு தழுவிய அனுமதி அளித்து அண்மையில் வெளியான நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய சதானந்த கவுடா அதற்கு இந்தியாவில் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் விரிவான ஆலோசனைகளுக்கு பிறகே இது தொடர்பான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடும் என்று அவர் விளக்கம் அளித்தார்.
 
திருநங்கைகள் நலன் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா கொண்டுவந்த தனிநபர் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர் இது மக்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறும் போது 377வது பிரிவு தானாகவே செல்லாததாகிவிடும் என்றார். எனினும் திருச்சி சிவா கொண்டு வந்த தீர்மானத்தில் இந்த பிரிவு குறித்து ஏதும் கூறப்படவில்லை என்பதால் மத்திய அரசின் இந்த முடிவு சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.