வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Updated : புதன், 30 ஜூலை 2014 (19:28 IST)

புனே அருகே நிலச் சரிவு: ஹெல்ப் லைன் எண் அறிவிப்பு

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள கிராமத்தில், பலத்த மழையின் காரணமாக, இன்று நிகழ்ந்த நிலச்சரிவில் 15 பேர் பலியாயினர். இடிபாடுகளில் 150க்கும் மேற்பட்டோர் மண்ணில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த இயற்கைப் பேரிடர் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் பெற, ஹெல்ப்லைன் எண் அறிவிக்கப் பட்டுள்ளது. 02026120720 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, மக்கள் தேவையான விவரங்களைப் பெறலாம்.

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் அம்பேகான் வட்டத்தில் மாலின் என்ற கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இதில் 40 வீடுகள்,  மண்ணில் புதையுண்டன. இந்த வீடுகளில் வசித்து வந்த 150 பேர்களைத் தேடிக் கண்டுபிடித்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 

மராட்டிய முதலமைச்சர் பிரித்விராஜ் சவுகானும் துணை முதல்வர் அஜீத் பவாரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.

சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து 30 அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்), மருத்துவ வசதி அளிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  மண் அள்ளும் எந்திரங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

100 பேர்களைக் கொண்ட தேசியப் பேரிடர் மீட்புக் குழுவின் இரண்டு குழுக்கள், சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அரசின் பல்வேறு துறைகளும் ஒன்றிணைந்து முழு வீச்சில் மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.

புனே மாவட்ட ஆட்சியரும் காவல் துறை கண்காணிப்பாளரும் சம்பவ இடத்தில் பணியாற்றி வருகின்றனர். புனே மண்டல ஆணையர் பிரபாகர் தேஷ்முக், மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.