வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : ஞாயிறு, 28 ஜூன் 2015 (10:42 IST)

லலித் மோடி பாதிக்கப்பட்டவர், தப்பியோடியவர் அல்ல: தேசியவாத காங்கிரஸ் கருத்து

நிதிமோசடி வழக்கில் சிக்கி , இங்கிலாந்து நாட்டில் உள்ள, ஐபிஎல் முன்னாள் தலைவர்  லலித் மோடி, பாதிக்கப்பட்டவர் என்றும் தப்பியோடியவர் அல்ல என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
 
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவி செய்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜையும், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவையும் பதவியில் இருந்து பிரதமர் மோடி நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடி வருகின்றது.
 
லலித் மோடிக்கு ஆதரவாக கோர்ட்டு ஆவணங்களில் கையெழுத்திட்டதாகவும், தனது மகன் துஷ்யந்த் நடத்தி வரும் நிறுவனங்களின் மூலம் ரூ.11 கோடி வரை ஆதாயம் பெற்றதாகவும் வசுந்தரா ராஜே மீது காங்கிரஸ் குற்றம் சாறிறியுள்ளது.
 
லலித் மோடி பிரச்சினையில் சிக்கியுள்ள முதலமைச்சர் வசுந்தரா ராஜே நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று டெல்லி வந்தார். அவர் மூத்த தலைவர்களை சந்திக்காமலேயே ராஜஸ்தான் திரும்பினார்.
 
இதைத் தொடர்ந்து, இவ்விவகாரத்தில் வசுந்தரா ராஜே தொடர்ந்து அமைதி காத்து வருகிறார். அவருக்கு பாஜக துணையாக உள்ளது. பாஜகவும், அதன் அமைச்சர்களும் வசுந்தரா ராஜேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், மஜீத் மெமோன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்தபேட்டியில், "சிறிய குற்றச்சாட்டுகள் இருப்பினும், லலித் மோடியின் மீது குற்றம் உள்ளது என்பது கண்டு பிடிக்கப்படவில்லை." என்றும், எனவே, "அவரை தவறு செய்தவர் என்றோ அல்லது தலைமறைவாக உள்ளவர் என்றோ கூறிவிட முடியாது." என்று கூறியுள்ளார்.
 
மேலும், "லலித் மோடி தனது நலம் விரும்பிகளிடமும், குழந்தை பருவத்தில் இருந்து தன்னை நன்றாக தெரிந்தவர்களிடமும் உதவியை கேட்டுஉள்ளார். இவை அனைத்திலும் தவறு எதுவும் கிடையாது. ஆனால் வசுந்தராவின் விவகாரத்தில், தான் எழுதிய கடிதமானது ரகசியமாக இருக்க வேண்டும் என்று வசுந்தரா ராஜே கேட்டுக் கொண்டுள்ளார். இது ஆட்சேபணைக்குரியது." என்றும் மஜீத் மெமோன் கூறியுள்ளார்.
 
 தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம்வகித்து, தற்போது பாஜக வுடன் இணக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.