வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2015 (14:41 IST)

லலித்மோடி மால்டா தீவில் பதுங்கல்; கைது செய்ய சர்வதேச போலீஸ் தீவிரம்

இந்திய அமலாக்கப்பிரிவு காவல் துறையினரால் தேடப்பட்டு வரும் லலித்மோடி, மால்டா தீவில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து, அவரை கைது செய்வதற்காக, சர்வதேச போலீசார் மால்டா தீவுக்கு விரைந்துள்ளனர்.
 

 
‘ஐ.பி.எல்’ கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருந்த லலித்மோடி, நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில், அவர் மீது, 2012ஆம் ஆண்டு டிசம்பரில் வரி ஏய்ப்பு, பணப் பரிவர்த்தனை மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்யவும் காவல் துறையினர் திட்டமிட்டு இருந்தனர்.
 
இதையறிந்த லலித்மோடி, இந்தியாவில் இருந்து தப்பி, லண்டனில் பதுங்கினார். 3 ஆண்டுகளாக அவர் அங்கு தலைமறைவாக உள்ளார். இதனிடையே, பாஜகவைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் லலித் மோடிக்கு சட்டத்தை மீறி உதவிசெய்ய முயன்றதாக புகார் எழுந்தது.
 
இப்பிரச்சனை பெரிதானதால், வேறு வழியின்றி, லலித்மோடியை கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியது. மும்பை உயர்நீதிமன்றம், லலித்மோடிக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத வாரண்ட் பிறப்பித்தது.
 
கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி ‘இண்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீசுக்கு, லலித்மோடிக்கு எதிரான ஆவணங்கள் மற்றும் கடிதங்களை சி.பி.ஐ. அனுப்பியது. இதைத் தொடர்ந்து சர்வதேச போலீஸ், லலித்மோடியைக் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
 
இந்நிலையில், லலித் மோடி மால்டா தீவில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால், சர்வதேச காவல் துறையினர், மால்டா தீவுக்கு விரைந்துள்ளனர். இதனால், அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.