1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 5 மே 2015 (15:49 IST)

அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன் பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான குமார் விஷ்வாஸ் மீது அக்கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பாக பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
அரவிந்த் கெஜ்ரிவால், குமார் விஷ்வாஸை பாதுகாக்கிறார் என குற்றம்சாட்டிய அவர்கள், நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என கூறியுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பு இருந்த தடைகளை உடைக்கும் முயற்சியில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர்.
 
குற்றச்சாட்டுகளுக்கு குமார் விஷ்வாஸை பதிலளிக்க செய்ய வேண்டும் என்று முறையிட்டதை அடுத்து டெல்லி பெண்கள் ஆணையம் குமார் விஷ்வாஸ் மற்றும் அவரது மனைவிக்கு நேற்று சம்மன் அனுப்பியது.
 
அவர்கள் இருவரும் ஆணையத்தின் முன் ஆஜராக வேண்டும் என கேட்டு கொண்டது. ஆணையத்தின் முன் ஆஜராக போவதில்லை என கூறியுள்ள குமார் விஷ்வாஸ் தனக்கு நோட்டிஸ் எதுவும் கிடைக்கவில்லை என இன்று கூறியுள்ளார்.
 
இதுகுறித்து குமார் விஷ்வாஸ் கூறும்போது, நடப்பவை அனைத்தும் பாஜக -வின் மோசமான எண்ணங்களின் வெளிப்பாடு. காவல்துறையினர், சமூக வலைதளங்களில் அந்த பெண் குறித்து இழிவாக செய்திகள் வெளியிடுவதற்கு எதிராக ஏன் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
குமார் விஷ்வாசுடன் தொடர்பு வைத்தது குறித்து புரளி பரவியதை அடுத்து தன்னிடம் இருந்து தனது கணவர் விலகி சென்று விட்டார் என அந்த பெண் கூறியது குறித்து கேட்டதற்கு பதிலளித்த குமார் விஷ்வாஸ், தனது மனைவியின் நடத்தை குறித்து சான்றிதழ் அளிக்க மற்றொரு நபரை தேடும் இவர் என்ன வகையான கணவர்? என கூறியுள்ளார்.
 
அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், எப்.ஐ.ஆர். முன்பே பதிவு செய்யப்பட்டுவிட்டது என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.