வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 22 டிசம்பர் 2014 (13:50 IST)

கேரள வனத்துறை அலுவலகம் மீது மாவோயிஸ்ட் தாக்குதல்

கேரள வனத்துறை அலுவலகம் மீது இன்று காலை மாவோயிஸ்ட்கள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
கேரள மாநிலம் வயநாடு, மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் இருந்து வருகிறது.
 
மாவோயிஸ்ட்களை தேடும் வேட்டையில் கேரளாவைச் சேர்ந்த தண்டர் போல்ட் என்னும் அதிரடிப் படையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், 15 நாட்களுக்கு முன்பு மானந்தவாடி வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, குகைக்குள் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதை எதிர்த்து அதிரடிப் படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினார்கள்.
 
இந்த சம்பவத்துக்கு பின் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், இன்று அதிகாலை கோவை-கேரள எல்லையில் முக்காலியில் உள்ள வனத்துறை அலுவலகம் மீது மாவோயிஸ்ட்கள் அதிரடி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே முக்காலியில் வனத்துறைக்கு சொந்தமான அலுவலகம் உள்ளது. இங்கு, 15க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள், வனத்துறை அலுவலகத்தை சுற்றி வளைத்து தாக்கி ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள்.
 
மேலும், அலுவலகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள். அங்கு நிறுத்தப்பட்டிருந்த வனத்துறைக்கு சொந்தமான ஜீப்பின் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்தனர். இதில் ஜீப் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த தாக்குதலுக்கு பின் மாவோயிஸ்ட்கள் வனத்துறை அலுவலக சுவர்களில் பரபரப்பான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
 
அந்த போஸ்டர்களில், ஆதிவாசி மக்களை வனத்துறையினரும், போலீசாரும் துன்புறுத்துகிறார்கள். அட்டப்பாடியில் ஆதிவாசிகள் அதிகம் வசிக்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் சத்துணவு கிடைக்காமல் இறக்கும் அவலம் நிலவி வருகிறது. இந்த பட்டினிச்சாவை தடுக்க கேரள அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது வேதனை அளிப்பதாக உள்ளது. ஆதிவாசி மக்களுக்காகவே நாங்கள் போராடுகிறோம். அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டத்தை யாராலும் ஒடுக்க முடியாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இந்த தாக்குதல் சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பாலக்காடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மஞ்சுநாதன் தலைமையில் போலீஸ் படை சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.