1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 2 மார்ச் 2015 (14:15 IST)

தீவிரவாதிகளுக்கு நன்றி கூறி சர்ச்சையை ஏற்படுத்திய காஷ்மீர் முதல்வர்

தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைத்த தீவிரவாதிகளுக்கு நன்றி என்று தனது பதவியேற்பு விழாவின்போது காஷ்மீர் முதல்வர் பேசியுள்ளார்.
 
முஃப்தி முஹமது சயீது இன்று காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார். பதவியேற்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”நான் இந்த நேரத்தில் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடக்க ஒத்துழைப்பு நல்கிய பாகிஸ்தான், ஹுரியத் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு நாம் கண்டிப்பாக நன்றி தெரிவிக்க வேண்டும்.

 
இதுவரை தீவிரவாதிகள் ஏதேனும் தவறு செய்திருந்தால் கடவுள் அவற்றை நிச்சயம் மன்னிப்பார். தீவிரவாதிகள் ஒத்துழைக்கவில்லை என்றால் நாம் தேர்தலை அமைதியாக நடத்தியிருக்க முடியாது. தேர்தல் சுமூகமாக நடக்க உதவிய இந்திய எல்லைக்கு அப்பால் உள்ள அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஏனென்றால், அவர்கள் தேர்தலுக்கு ஒரு அமைதியான சூழல் ஏற்பட உதவினார்கள். காஷ்மீரில் ஜனநாயக நடைமுறை சீராக நடைபெற அனுமதித்தார்கள். எனவே, பாகிஸ்தான், ஹுரியத் மற்றும் தீவிரவாதிகளின் தாராள மனப்பான்மைக்கு நாம் நன்றியை தெரிவிக்க வேண்டும்.
 
எந்த ஒரு ஆட்சிக்கும் அமைதியான சூழல் இன்றியமையாதது. தேர்தல் நேரத்தில் தீவிரவாதிகள் ஏதாவது செய்திருந்தால் மக்களின் பங்களிப்பு இந்த அளவுக்கு இருந்திருக்காது. தேர்தலில் பங்கேற்ற காஷ்மீர்வாசிகள் அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.